யூக்கிறேன், காசா யுத்தங்களால் ஐரோப்பிய விமான சேவைகள் மிகவும் பாதிப்பு அடைகின்றன. பல ஐரோப்பிய விமான சேவைகள் ஆசியாவுக்கான சேவைகளை குறைத்துள்ளன.
யூக்கிறேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின் ரஷ்யா மீது மேற்கு தடை விதித்ததால் ஐரோப்பிய விமான சேவைகள் நீண்ட சுற்றுவழி பாதையாலேயே பயணிக்கவேண்டி உள்ளன. அது எரிபொருள், ஊழியர் செலவுகளை அதிகரிக்க இலாபம் அற்று போகிறது.
உதாரணமாக பிரித்தானியாவின் லண்டன் நகருக்கும் சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் இடையில் பறக்க ரஷ்யா மேலால் பறக்கும் China Southern (CZ673) விமான சேவைக்கு 10 மணித்தியாங்களே தேவைப்படுகிறது. அந்த இரு நகரங்களுக்கும் இடையில் சுற்றுவழி பாதையில் பறக்கும் British Airways (BA88) விமான சேவைக்கு 13 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது.
Finnair விமான சேவைக்கு முன்னர் 8:30 மணித்தியாலங்கள் தேவைப்பட்ட Helsinki-Shanghai சேவைக்கு தற்போது 11:24 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது. முன்னர் கிழமைக்கு 42 சேவைகளை சீனாவுக்கு செய்த Finnair தற்போது கிழமைக்கு 3 சேவைகளை மட்டும் செய்கிறது.
Virgin Atlantic விமான சேவை சீனாவுக்கான சேவைகளை முற்றாக நிறுத்துகிறது.