சல்வடோரில் வன்முறை குறைய அமெரிக்காவில் அகதிகள் குறைவு 

சல்வடோரில் வன்முறை குறைய அமெரிக்காவில் அகதிகள் குறைவு 

மொத்தம் 6 மில்லியன் மக்களை மட்டும் கொண்ட மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் (El Salvador) சில ஆண்டுகளுக்கு முன் வரை உலகின் கொலை தலைநகரம் (murder capital of the world) என்றே அழைக்கப்பட்டது. 

2019ம் ஆண்டு அங்கு மணித்தியாலத்துக்கு ஒரு கொலை இடம்பெற்றது. அப்போது அங்கு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் எல்லாம் சாதாரணமாக இடம்பெற்றன.

ஆனால் 2019ம் ஆண்டு வந்த 37 வயது சனாதிபதி Nayib Bukele நிலைமையை தலைகீழ் ஆக்கினார். மக்கள் அதிசயப்படும் அளவுக்கு அங்கு வன்முறை குறைந்தது. வன்முறை குழுக்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டன.

வன்முறைகள் காரணமாக முன்னர் பெருமளவு சல்வடோர் மக்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்று இருந்தனர். தற்போது அவ்வாறு சல்வடோர் மக்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக செல்வது பெருமளவு குறைந்துள்ளது என்பதை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

2022ம் ஆண்டு 97,000 சல்வடோரியன் அமெரிக்காவுள் அகதியாக நுழைய முனைந்ததாகவும், 2023ம் ஆண்டு அத்தொகை 61,000 ஆக குறைந்ததாகவும், இந்த ஆண்டு மேலும் குறைவடையும் என்றும் அமெரிக்காவின் Customs and Border Protection கூறியுள்ளது.

வழமைபோல் மனித உரிமைகள் குழுக்கள் சல்வடோர் அரசின் கடும் போக்கை கண்டிக்கின்றன. அங்கு சுமார் 80,000 சந்தேகநபர்கள் கடும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.