உலக உச்ச சனத்தொகை 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கணிப்புகள் கூறியதற்கும் குறைவானதாக இருக்கும் என்றும் அந்த நிலையை விரைவில் அடைந்துவிடும் என்று ஐ.நா. நேற்று வியாழன் கூறியுள்ளது.
தற்போது உலக சனத்தொகை 8.2 பில்லியன் என்றும் 2085ம் ஆண்டளவில் சனத்தொகை 10.3 பில்லியன் ஆக உச்சத்தை அடையும் என்கிறது ஐ.நா. அதன் பின் சனத்தொகை குறைந்து 10.2 பில்லியனை அடையும் என்றும் கூறப்படுகிறது. இத்தொகை முன்னர் எதிர்பார்த்த தொகையிலும் 700 மில்லியன் குறைவு.
சீனா, ஜெர்மனி, ஜப்பான் உட்பட 63 நாடுகளின் சனத்தொகை ஏற்கனவே உச்சத்தை அடைந்துவிட்டன என்றும் அடுத்த 30 ஆண்டுகளில் இவற்றின் மொத்த சனத்தொகை 14% ஆல் வீழ்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது 1,400 மில்லியன் ஆகவுள்ள சீனாவின் சனத்தொகை 2100ம் ஆண்டளவில் 633 மில்லியன் ஆக வீழ்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது. அப்போது இந்தியாவின் சனத்தொகை 1,500 மில்லியன் ஆக இருக்கும்.
பிரேசில், ஈரான், துருக்கி, வியட்நாம் உட்பட 48 நாடுகள் 2054ம் ஆண்டுக்கு முன் உச்ச சனத்தொகையை அடையும் என்றும், அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் உட்பட 126 நாடுகள் 2054ம் ஆண்டுக்கு பின் உச்ச சனத்தொகையை அடையும் என்றும் கூறப்படுகிறது.
அங்கோலா, CAR, கொங்கோ, சோமாலியா ஆகிய நாடுகளில் 2054ம் ஆண்டு சனத்தொகை தற்போதைய சனத்தொகையின் இரண்டு மடங்காக இருக்குமாம்.