nVIDIA என்ற பெருமளவில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கணனி chip தயாரிக்கும் நிறுவனம் உலக அளவில் முதலாவது பங்குச்சந்தை (stock) பெறுமதி கொண்ட நிறுவனம் ஆகியுள்ளது.
நேற்று செவ்வாய் இதன் பங்குச்சந்தை பெறுமதி $3.334 ட்ரில்லியன் ($3,334 பில்லியன்) ஆகியுள்ளது. இரண்டாம் இடத்தில் $3.317 ட்ரில்லியன் பங்குச்சந்தை பெறுமதி கொண்ட Microsoft நிறுவனமும், மூன்றாம் இடத்தில் $3.286 ட்ரில்லியன் பெறுமதி கொண்ட Apple நிறுவனமும் உள்ளன.
நேற்று செவ்வாய் மட்டும் nVIDIA பங்குச்சந்தை பெறுமதி $113 பில்லியனால் அதிகரித்து உள்ளது.
இரண்டு கிழமைகளுக்கு முன் nVIDIA பங்கு ஒன்றின் விலை $1,200 வரையில் இருந்தது. அந்த பழைய பங்கு ஒவ்வொன்றுக்கும் புதிய 10 பங்குகள் வழங்கப்பட்டன (1 க்கு 10 stock split). அதனால் புதிய பங்கு ஒன்றின் விலை $120 ஆனது. அந்த புதிய பங்கு நேற்று செவ்வாய் $135.58 ஆகியது.
அமெரிக்காவை தளமாக கொண்ட nVIDIA Jensen Huang என்ற தாய்வானில் பிறந்த சீனராலும் மேலும் இருவராலும் 1993 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.