உல்லாச பயணிகளை கவரும் நோக்கில் இலங்கை 7 நாட்டவர்களுக்கு இலவச உல்லாச பயணிகள் விசாவை வழங்க முன்வந்துள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 7 நாட்டவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்த சலுகை 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வகை சலுகைகள் மூலம் இலங்கை 2026ம் ஆண்டு அளவில் ஆண்டுக்கு 5 மில்லியன் உல்லாச பயணிகளை உள்ளெடுக்க முனைகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் வரை சுமார் 1 மில்லியன் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்றும் ஆண்டு முடிவில் இத்தொகை 1.5 மில்லியன் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிகப்படியாக இந்தியாவில் இருந்து 200,310 பயணிகள் வந்துள்ளனர். அடுத்து ரஷ்யாவில் இருந்து 132,300 பயணிகள் வந்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கை உல்லாச பயணிகள் வருகை மூலம் $1.3 பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இக்காலத்தில் $833 மில்லியன் வருமானத்தை மட்டுமேபெற்றிருந்தது.