ஜப்பான் அடுத்த 5 ஆண்டுகளில் $320 பில்லியன் பணத்தை தனது இராணுவத்தில் முதலிட உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் Fumio Kishida இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இவ்வகை பாரிய இராணுவ முன்னெடுப்பு ஜப்பானில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை.
இதனால் ஜப்பான் தனது இராணுவத்தில் செலவழிக்க உள்ள புதிய தொகை முன்னைய தொகையிலும் இரண்டு மடங்காகிறது. இந்த அதிகரிப்பின் ஜப்பானின் இராணுவ செலவு அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகின் 3ஆவது பெரியதாக தொகையாக இருக்கும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்காவிடம் நிபந்தனை இன்றி சரண் அடைந்த ஜப்பான் தனக்கொரு இராணுவத்தை கொண்டிருக்க அமெரிக்காவால் அனுமதிக்கப்படவில்லை. தற்பாதுகாப்பு படை என்ற ஒரு படையே இருந்தது. ஜப்பானிடம் இராணுவம் இருப்பதை அமெரிக்காவே தடுத்து வந்திருந்தது.
ஆனால் அமெரிக்கர் Perl Harbor தாக்குதலை மெல்ல மறக்க, ஜப்பானியர் ஹிரோஷிமா, நாகசாகியை மெல்ல மறக்க அமெரிக்கா ஜப்பான் இராணுவம் வளர்வதை ஆதரிக்க ஆரம்பித்தது.
ஜப்பானின் Article 9 சட்டப்படி தற்போதும் அங்கு ஒரு இராணுவம் இல்லை. ஆனாலும் தற்பாதுகாப்பு படை நடைமுறையில் மெல்ல ஒரு இராணுவம் ஆகி வருகிறது.
அண்மையில் ஜப்பான், பிரித்தானிய, இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து புதியதொரு யுத்த விமானத்தை தயாரிக்க இணங்கி இருந்தது. இந்த முயற்சிக்கு ஜப்பான் $5.6 பில்லியன் முதலிடுகிறது.