தான் பல்கலைக்கழகம் சென்று படிக்கவேண்டும் என்ற அவா காரணமாக தற்போது வயது 56 கொண்ட Liang Shi, மொத்தம் 27 தடவைகள் சீனாவின் Gaokao என்ற பல்கலைக்கழக நுழைவுக்கான தேசிய பரீட்சையை எடுத்துள்ளார். ஆனால் அவர் எந்த ஒரு தடவையும் நுழைவுக்கு தேவையான புள்ளிகளை பெறவில்லை.
இவர் 1983ம் ஆண்டு, தனது 16ம் வயதில், முதல் தடவை Gaokao பரீட்சைக்கு சென்றுள்ளார். அம்முறை பல்கலைக்கழக நுழைவுக்கு தேவையான புள்ளிகள் பெறாத இவர் 1992ம் ஆண்டு வரை Gaokao பரீட்சை எடுத்துள்ளார். அதற்கு பின் அக்காலத்தில் அங்கு நடைமுறையில் இருந்த வயது கட்டுப்பாடு காரணமாக அவர் தொடர்ந்தும் பரீட்சைக்கு செல்ல முடியவில்லை.
பின்னர் இவர் மர வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து பெரும் இலாபம் பெற்றார். அதை தொடர்ந்து கட்டிட பொருட்கள் வர்த்தகம் ஒன்றையும் ஆரம்பித்து மில்லியனர் ஆனார். திருமணம் செய்த இவருக்கு ஒரு மகனும் உண்டு.
2001ம் ஆண்டு சீன அரசு Gaokao வயது கட்டுப்பாட்டை தளர்த்தியதால் மீண்டும் இவர் Gaokao பரீட்சைஎடுக்க ஆரம்பித்தார். கடந்த ஜூன் 7ம் திகதி இவர் 27 ஆவது தடவையாக Gaokao பரீட்சைக்கு சென்றார். ஆனால் அவர் மொத்தம் 750 புள்ளிகளில் 424 புள்ளிகளை மட்டுமே இந்த ஆண்டு பெற்றார். அவர் பெற்ற புள்ளிகள் பல்கலைக்கழக நுழைவுக்கு 34 புள்ளிகள் குறைவு.
சீனா முழுவதும் இடம்பெறும் Gaokao உலகிலேயே மிக கடுமையான பரீட்சை. சீன மொழி, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் (பெளதீகம் அல்லது இரசாயனம் அல்லது உயிரியல்) அல்லது கலை (அரசியல் அல்லது வரலாறு அல்லது புவியியல்) ஆகிய 4 பாடங்களை கொண்டது. இந்த ஆண்டு 12.91 மில்லியன் மாணவர் Gaokao பரீட்சை எழுதியிருந்தார்கள்