அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களை பயணித்த Ford Expedition SUV வாகனத்தில் 8 பேருக்கு மட்டுமே ஆசனங்கள் உண்டு. ஆனால் அதில் 25 பேர் பயணித்து உள்ளனர். அந்த வாகனம் இரண்டு பெட்டிகளை இழுத்து செல்லும் கனரக வாகனம் ஒன்றின் குறுக்கே சென்று விபத்துக்கு உள்ளானது.
பலியானோர் மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற அகதிகள் என்று கூறப்படுகிறது. அன்று குறைந்தது 44 பேர் எல்லை வேலியில் 10 அடி நீள துவாரம் ஏற்படுத்திய அமெரிக்காவுக்குள் நுழைந்து உள்ளனர். அவர்களில் 25 பேர் பயணித்த வாகனமே விபத்துக்கு உள்ளானது.
SUV மேற்கு நோக்கி சென்ற பாதை Norris Road ஒரு சிறிய பாதை. அது State Road 115 என்ற வேகமாக பயணிக்கும் பாதையை கடக்கும் இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. விபத்துக்கு உள்ளான SUV தனக்குரிய STOP sign அருகே நின்று பின் பெரு வீதியை கடந்து விபத்துக்கு உள்ளானதா, அல்லது நில்லாமலேயே சென்று விபத்துக்கு உள்ளானதா என்று இதுவரை அறியப்படவில்லை.
மரணித்தோரின் உடல்களை அடையாளம் காண மெக்ஸிக்கோ அரசின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.
பார வாகனத்தின் சாரதியும், வயது 68, காயப்பட்டு உள்ளார்.
ஏனைய 19 பேரும் பயணித்த வாகனம் இன்னோர் இடத்தில் தீ பற்றிக்கொண்டதால் அவர்கள் வாகனத்தில் இருந்து வெளியேறி தப்பி உள்ளனர். அவர்களை அமெரிக்க எல்லை காவல் கைது செய்துள்ளது.