கப்பல் விபத்து என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது Titanic விபத்தே. ஆனால் 1912ம் ஆண்டு 1,496 பேரை பலி கொண்ட Titanic விபத்து உலகின் மூன்றாவது பெரிய பயணிகள் கப்பல் விபத்தே. இரண்டாவது பெரிய பயணிகள் விபத்து 2002ம் ஆண்டு 1,863 பேரை பலி கொண்ட Le Joola கப்பல் விபத்து.
இருபது ஆண்டுகளுக்கு முன், 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி, Le Joola என்ற பயணிகள் கப்பல் Senegal என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டின் Ziguinchor என்ற இடத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகர் Dakar செல்கையில் சூறாவளிக்குள் அகப்பட்டு கவிந்தது.
விபத்துக்கு சூறாவளி காரணம் என்றாலும், பல மனித தவறுகளே விபத்துக்கு பிரதான காரணங்கள். ஆனாலும் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட 79.5 மீட்டர் நீளமான இந்த கப்பல் 12 ஆண்டுகளுக்கு முன்னரே சேவைக்கு வந்திருந்தது. இதில் சட்டப்படி 580 பயணிகள் மட்டுமே பயணிக்க உரிமை இருந்தது. ஆனால் விபத்து இடம்பெற்ற வேளையில் 2,000 க்கும் அதிகமானோர் பயணித்து உள்ளனர்.
பயணித்தோரில் 1,034 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி பயணித்து உள்ளனர். ஏனையோர் முறைப்படி கட்டணம் செலுத்தாது பயணித்து உள்ளனர்.
இந்த கப்பல் கரையோரத்தில் மட்டுமே பயணிக்க உரிமை கொண்டு இருந்தது. அனால் அந்த நாட்டு படைகளால் இயக்கப்பட்ட இந்த கப்பல் ஆழ் கடலிலேயே விபத்துக்கு உள்ளாகியது.
காற்றோட்டம் பெறும் நோக்கில் அளவுக்கு அதிகமானோர் கப்பலின் மேல் தட்டில் இருந்தமையால் கப்பலின் புவியீர்ப்பு மையம் உயர்ந்து கவிழ்வது இலகுவாயிற்று.
இந்த கப்பலில் 2 இயந்திரங்கள் இருந்தாலும், விபத்து நேரத்தில் ஒரு இயந்திரம் மட்டுமே இயங்கும் நிலையில் இருந்துள்ளது.
விபத்து இடம்பெற்று 17 மணித்தியாலங்களின் பின்னரே அரசின் காப்பாற்றும் பணிகள் ஆரம்பித்தன. விபத்து இரவு இடம்பெற்றாலும், மறுநாள் காலை 7:00 மணியளவில் அவ்வழியாக சென்ற படகுகள் கூறியே அரசு விபத்தை அறிந்தது. விபத்துக்கு உள்ளான சிலரை மீன்பிடி படகு உரிமையாளர் சென்று காப்பாற்றினர்.
பலரின் உடல்கள் தற்போதும் கப்பலுடன் சுமார் 59 அடி ஆழத்தில் உள்ளன. ஆழ்கடல் நீரோட்டம் மற்றும் அலைகள் காரணமாக கடலின் அடியில் உள்ள இக்கப்பல் வடகிழக்கே மெல்ல நகர்ந்து வருகிறது.
மரணித்தோரில் 18 பேர் பிரெஞ்சு நாட்டவர் ஆகையால் பிரான்சும் தனது விசாரணையை ஆரம்பித்து இருந்தது. ஆனால் அதுவும் 2014ம் ஆண்டு கைவிடப்பட்டது.
அரசை நீதிமன்றம் இழுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் கீழ் மரணித்த ஒவொருவருக்கும் சுமார் $15,000 நட்டஈடு வழங்கப்பட்டு இருந்தது.
உலகின் முதலாவது பெரிய பயணிகள் கப்பல் விபத்து 1987ம் ஆண்டு பிலிப்பீன் நாட்டில் இடம்பெற்றது. Dona Paz என்ற பயணிகள் கப்பலும், MT Vector என்ற எரிபொருள் காவும் கப்பலும் மோதியதால் 4,386 பேர் பலியாகினர்.