இந்திய-சீன எல்லையில் இருந்து சுமார் 10,000 சீன படைகள் பின் நகர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு கிழமைகளாக இந்த நகர்வு இடம்பெற்று வருகின்றது. இந்திய-சீன எல்லையில் போர் உருவாகாது என்ற நம்பிக்கையிலேயே சீனா தனது படைகளை பின் நகர்த்துவதாக கூறப்படுகிறது.
சீன நகர்வின் பின் இந்தியாவும் தனது படைகளை பின் நகர்த்தலாம் என்றும் கருதப்படுகிறது. இந்திய இராணுவ தளபதி ஜெனரல் Manoj Mukund Naravane இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் விரைவில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம் என்றுள்ளார்.
ஜூன் மாதம் இடம்பெற்ற ஆயுதம் இன்றிய மோதல்களின் பின் இரண்டு நாடுகளும் தமது படைகளை அங்கு அதிகரித்து இருந்தன. ஜூன் மோதல்களுக்கு 20 இந்திய படையினரும், 3 சீன படையினரும் பலியாகினர்.
மிக உயர்ந்த மலை பகுதிகளில், மிகவும் குளிரான காலத்தில் படைகளை நீண்டகாலம் கொண்டிருப்பது இலகுவானதல்ல. அங்கு நீண்டகாலம் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் மனநிலை பாதிப்பு அடைவதுடன், அவர்களுக்கு தேவையான பாவனை பொருட்களை எடுத்து செல்வதும் மிக கடினம்.
இந்திய படைகள் காணக்கூடியதாக வெளிப்படையாகவே தமது இராணுவ வாகனங்கள் மூலமே சீன படைகள் பின் நகர்கின்றன. ஆனாலும் இந்த படைகள் தேவைப்படின் விரைவாக மீண்டும் எல்லைக்கு நகரக்கூடிய தூரங்களுக்கே சென்றுள்ளன. இந்த படைகள் திபெத், Xingjiang பகுதிகளை தளமாக கொண்டவை.