பிலிப்பீன் விமான படைக்கு சொந்தமான Lockheed C-130 வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது 50 பேர் பலியாகியும், சிலர் காயமடைந்தும் உள்ளனர். நிலத்தில் இருந்த 3 பொதுமக்களும் பலியானோருள் அடங்குவர்.
Hercules என்றழைக்கப்படும் மேற்படி விமானம் தரை இறங்குவதற்கு பிந்தியதால், மிகுதி ஓடுபாதை போதுமானதாக இல்லாமலிருக்கும் என்ற காரணத்தால் விமானி மீண்டும் அந்த விமானத்தை மேலே ஏற்ற முயன்றுள்ளார். ஆனால் போதிய உந்தம் இல்லாத காரணத்தால் விமானம் ஊடுபாதைக்கு அப்பால் சென்று மரங்களுடன் மோதி தீப்பற்றி உள்ளது.
உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மரணித்த படைகளில் பெரும்பாலானோர் இராணுவத்தை புதிதாக பயிற்சி பெற்றவர்கள்.
1988ம் ஆண்டு அமெரிக்க விமான படையில் சேவைக்கு வந்திருந்த இந்த விமானத்தை கடந்த ஜனவரி மாதமே அமெரிக்கா பிலிப்பீன்ஸுக்கு இலவசமாக வழங்கி இருந்தது.
குறைந்தது 60 நாடுகளின் விமானப்படைகள் இவ்வகை விமானத்தை பயன்படுத்துகின்றன. 1954ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சுமார் 2,500 Hercules விமானங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.