ஹெயிற்ரி (Haiti) என்ற மத்திய அமெரிக்காவின் கிழக்கே உள்ள நாட்டின் சனாதிபதி Jovenel Moise, வயது 53, அவரது வீட்டில் வைத்து புதன் அதிகாலை 1:00 மணிக்கு துப்பாக்கி குழு ஒன்றால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரின் உடலில் 12 துப்பாக்கி சூட்டு காயங்கள் இருந்தன. அவரின் மனைவியும் காயமடைந்து இருந்தார்.
ஹெயிற்ரி போலீசாரின் அறிக்கைபடி 26 கொலம்பியா நாட்டவரும், 2 அமெரிக்கரும் இந்த தாக்குதலை செய்து உள்ளனர். அமெரிக்கர் இருவரும் ஹெயிற்ரியில் பிறந்து, அமெரிக்கா சென்று, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இரண்டு அமெரிக்கரும், 15 கொலம்பியரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். சில சந்தேக நபர்கள் போலீசால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். வேறு 8 பேர் தற்போதும் தேடப்பட்டு வருகின்றனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியா சந்தேக நபர்களில் குறைந்தது 6 பேர் தம்நாட்டின் முன்னாள் படையினர் என்று கூறியுள்ளது. அத்துடன் கொலம்பியா விசாரணைகளுக்கு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் கூறியுள்ளது.
தாக்குதலுக்கான நோக்கம், உதவிகள் செய்தோர் ஆகிய விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை.