தான் சனாதிபதி ஆகியவுடன் சீனாவுக்கு பயணிக்க விரும்புவதாக ரம்ப் தனது அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். அத்துடன் அவர் இந்தியாவுக்கும் செல்லக்கூடும்.
இந்திய பிரதமர் மோதியுடன் ரம்ப் தனது முதல் ஆட்சியில் நெருக்கமான உறவை கொண்டிருந்தாலும், சீன சனாதிபதியுடன் ரம்ப் தொடர்ச்சியாக முரண்பட்டு இருந்தார்.
ரம்ப் நாளை திங்கள் இடம்பெறவுள்ள தனது பதவியேற்பு நிகழ்வுக்கு சீன ஜனாதிபதியை அழைத்து இருந்தாலும், சீன சனாதிபதி சீ தனக்கு பதிலாக Han Zheng என்ற உதவி சனாதிபதியையே அனுப்புகிறார்.
ரம்பும் சீயும் கடந்த வெள்ளிக்கிழமை பொருளாதாரம், ரஷ்யா, TikTok ஆகியன தொடர்பாக தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.
பைடென் விதித்த தடை காரணமாக அமெரிக்காவில் TikTok சேவை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரம்ப் தான் TikTok சேவையை அமெரிக்காவில் மேலும் 90 தினங்களுக்கு நீடிக்க விரும்புவதாக கூறியிருந்தார்.