விண்வெளியில் இரண்டு கலங்களை இணைக்கும் (docking) பயிற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. அந்த முயற்சியின் ஒரு படியாக இந்தியாவின் ISRO திங்கள் ஒரு கணையை ஏவி உள்ளது. இந்த கணையில் 2 கலங்கள் காவப்பட்டு உள்ளன.
SpaDeX என்ற இந்த பயிற்சிக்கு வசதியாக இந்தியா ஏவிய கலம் ஒவ்வொன்றும் 220 kg எடை கொண்டவை. இவை இரண்டும் 470 km உயரத்தில் பூமியை வலம் வர வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த கிழமை (ஜனவரி 7ம் திகதி) இவற்றில் ஒன்று மற்றைய கலத்துடன் இணைந்து (docking) சில பரிசோதனைகளை செய்யும். இறுதியில் அவை மீதும் பிரிவடைந்து செல்லும்.
சந்திரனுக்கு சென்று திரும்பும் திட்டத்துக்கும், விண்ணில் ஆய்வு கூடம் ஒன்றை கொண்டிருத்தலுக்கும் இவ்வகை அறிவு அவசியம். சந்திரன் சென்று திரும்பும் கலம் இவ்வாறு பூமியை சுற்றும் கலத்துடன் இணைந்த பின்னரே பூமியில் இறங்கும். சந்திரனில் இறங்கும் கலமும் இவ்வாறு சந்திரனை வலம்வரும் கலத்துடன் இணையும்.
இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா இவ்வகை அறிவை கொண்ட நாலாவது நாடாகும்.