அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த இறக்குமதி வரி (tariffs) யுத்தம் காரணமாக சீன விமான சேவை ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்ட அமெரிக்காவின் Boeing விமானம் ஒன்று அமெரிக்கா திரும்பி உள்ளது.
உலகின் இரண்டு பிரதான விமான தயாரிப்பு நிறுவங்களின் ஒன்று அமெரிக்காவின் Boeing நிறுவனம், மற்றையது ஐரோப்பாவின் Airbus.
சீனா தனக்கு தேவையான பயணிகள் விமானங்களில் அரை பங்கை Boeing நிறுவனத்திடம் இருந்தே கொள்வனவு செய்யும்.
மேற்படி அமெரிக்கா திரும்பிய விமானம் ஒரு Boeing 737 MAX வகை விமானம் ஆகும். சீனாவின் Xiamen Airlines விமான சேவை நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட இதன் விலை சுமார் $55 மில்லியன்.
ஆனால் தற்போதைய அதிகரித்த இறக்குமதி வரி அந்த விமானத்தின் விலையை $125 மில்லியன் வரையில் அதிகரித்து உள்ளது.
இந்த அளவிலான விமானத்தை Xiamen ஐரோப்பாவின் Airbus நிறுவனத்திடம் மேலதிக வரி இன்றி கொள்வனவு செய்யலாம்.
கடந்த காலங்களில் Boeing தயாரிக்கும் விமானங்களில் சுமார் 25% சீனாவுக்கே சென்றன. அதனால் சீன சந்தை Boeing க்கு பெரியதொரு இழப்பாகும்.
2018ம் ஆண்டில் Boeing மொத்தம் 806 விமானங்களை உலகம் எங்கும் விற்பனை செய்திருந்தது. Airbus 800 விமானங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு Boeing 528 விமானங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு அத்தொகை மேலும் குறையும்.