வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் ஏவுகணை இயந்திரம்

வட கொரியாவிடம் திண்ம எரிபொருள் ஏவுகணை இயந்திரம்

வட கொரியா இன்று வியாழன் திண்ம நிலை எரிபொருளை பயன்படுத்தும் அதிக உந்த ஏவுகணை (high-thrust solid-fuel) இயந்திரத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதுவரை பெரிய ஏவுகணைகளில் திரவ நிலை எரிபொருளையே வட கொரியா பயன்படுத்தியது.

உதாரணமாக நாம் பொங்கலுக்கு ஏவும் ஈக்குவானம் ஒரு திண்ம நிலை எரிபொருளை கொண்டது. அதில் உள்ள வெடிமருந்து திண்ம நிலையில் உள்ளது.

பொதுவாக திரவ நிலையில் உள்ள எரிபொருள் அதிக பயன்களை கொண்டது. இதை இலகுவில் கட்டுப்படுத்தலாம். ஆனால் பொதுவாக திரவநிலை எரிபொருள் மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்படும். ஏவலுக்கு முன்னரே திரவ எரிபொருள் ஏற்றப்படும். அத்துடன் அதை ஒரு ஏவுகணைக்கு ஏற்ற அதிக நேரம் தேவைப்படும். அதனால் திரவ நிலை எரிபொருள் செய்மதி ஏவல் போன்ற பொதுசன ஏவலுக்கு மட்டுமே சிறந்தது.

ஆனால் இராணுவ ஏவலுக்கு திண்ம எரிபொருளே சிறந்தது. திண்ம எரிபொருள் தயாரிப்பு நேரத்திலேயே உள்வைக்கப்படும். அதனால் அறிவித்தல் கிடைத்தவுடன் குண்டு கொண்ட ஏவுகணையை ஏவ வசதியாக இருக்கும். திண்ம எரிபொருள் ஆபத்தும் குறைந்தது, இலகுவில் காவக்கூடியது.

வட கொரியா அடுத்து திண்ம நிலை ICBM ஏவுகணைகளை தயாரிக்கலாம். அச்செயல் அமெரிக்காவை பலத்த விசனத்துக்கு உள்ளாகும்.

சீனாவே முதல் தடவையாக திண்ம எரிபொருளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. Song dynasty இராணுவம் 13ம் நூற்றாண்டில் Kaifeng என்ற இடத்தில் இராணுவ முற்றுகை ஒன்றுக்கு திண்ம எரிபொருளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.