தற்போது 1.9 மில்லியன் ஆக இருக்கும் ரஷ்யாவின் படை தொகையை 2.04 மில்லியன் ஆக அதிகரிக்கிறார் ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின். யுகிரைன் யுத்தம் எதிர்பார்த்தபடி இலகுவாக செல்லாமையே இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவின் CIA அதிகாரி ரஷ்யா யுகிரைன் யுத்தத்தில் சுமார் 15,000 படையினரை இழந்து உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் அதன் 3 மடங்கு படையினர் காயப்பட்டு இருக்கலாம் என்றும் கூறியிருந்தார். இந்த யுத்தம் தற்போது 7 மாதங்களாக இழுபடுகிறது.
மேலதிகமாக உள்வாங்கப்படும் 137,000 படையினருடன் ரஷ்யா மொத்தம் 1.15 மில்லியன் யுத்தத்துக்கு தயார்நிலை படையினரை கொண்டிருக்கும்.
இதற்கு முன் 2017ம் ஆண்டு ரஷ்யா படையினர் தொகையை 13,698 ஆலும், படையினர் அல்லாத ஊழியர் தொகையை 5,357 ஆலும் மட்டும் அதிகரித்து இருந்தது.
ரஷ்யாவில் 18 முதல் 27 வயதான ஆண்கள் 1 ஆண்டு இராணுவ சேவையை செய்தல் அவசியம். ஆனால் பலரும் பல்கலைக்கழக அனுமதி, உடல்நல குறைபாடு போன்ற காரணங்களை கூறி இராணுவ சேவையை தவிர்த்து விடுகிறார்கள்.