ரஷ்ய எண்ணெய் பரலுக்கு மேற்கு $60 உச்ச விலை

ரஷ்ய எண்ணெய் பரலுக்கு மேற்கு $60 உச்ச விலை

இன்று முதல் ரஷ்ய எண்ணெய் பரல் ஒன்றுக்கு அதிகப்படியாக $60 மட்டுமே செலுத்தலாம் என்று G7 உட்பட மேற்கு நாடுகள் விதி வகுத்துள்ளன. ஆனால் இந்த விதியை ரஷ்யா நிராகரித்து உள்ளது.

இந்த விதிப்படி மேற்கு நாடுகளில் வர்த்தகம் செய்யும் எண்ணெய் கப்பல் நிறுவனங்கள், கப்பல் பயணத்துக்கு காப்புறுதி வழங்கும் நிறுவனங்கள், கொள்வனவுக்கு உதவும் வங்கிகள் ஆகியன தாம் தலையிடும் ரஷ்ய எண்ணெய் கொள்வனவுகளின் பரல் ஒன்றின் விலை $60 அல்லது அதற்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

மேற்படி விதியை மீறும் நிறுவனங்கள் மேற்கு நாடுகளால் தண்டிக்கப்படும்.

இவ்வாறு ரஷ்ய எண்ணெய் விலைக்கு கட்டுப்பாடு வைப்பதால் ரஷ்யா எண்ணெய் விற்பனை மூலம் அடையும் இலாபத்தை குறைக்க முனைகின்றன மேற்கு நாடுகள். ஆனால் இந்த விதி எவ்வளவு தூரம் பயனை மேற்கு நாடுகளுக்கு வழங்கும் என்பது கேள்விக்குறியே.

ரஷ்யாவின் எண்ணெய்யை பெருமளவில் கொள்வனவு செய்யும் சீனாவும், இந்தியாவும் மேற்படி விதியை நிராகரித்து உள்ளன.

யுகிறேன் ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேற்கு நாடுகள் முற்றாக தடை செய்ய விரும்பி இருந்தாலும், அக்டோபர் மாதத்திலும் ரஷ்யா நாள் ஒன்றில் சுமார் 9.72 பில்லியன் பரல் எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளது. சவுதிக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி ரஷ்யாவினுடையதே.