ரஷ்யா மீண்டும் பயணிகள் விமான தயாரிப்பில்

ரஷ்யா மீண்டும் பயணிகள் விமான தயாரிப்பில்

மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடைகள் காரணமாக ரஷ்யா மீண்டும் தனது சொந்த பயணிகள் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த முயற்சியின் முதல் படியாக IL-96-400M என்ற அகலமான பயணிகள் விமானத்தை பறந்து பரிசோதனை செய்துள்ளது.

சுமார் 370 பயணிகளை காவக்கூடிய இந்த புதிய விமானம் 2,000 மீட்டர் உயரத்திலும், 390 km/h வேகத்திலும் 26 நிமிடங்கள் பறந்துள்ளது.

யுக்கிறேன் ஆக்கிரமிப்பிற்கு முன் ரஷ்யா அமெரிக்க Boeing, ஐரோப்பிய Airbus தயாரித்த பயணிகள் விமானங்களையே பயன்படுத்தியது. ஆனால் தடைகள் காரணமாக ரஷ்யா மேற்கின் விமானங்களையும், அவற்றுக்கான பாகங்களையும் பெறமுடியாது உள்ளது.

ரஷ்யாவிடம் விமானம் தயாரிக்கும் அறிவு இருந்தாலும், அவற்றை வெளிநாடுகள் இலகுவில் கொள்வனவு செய்யா. அதனால் ரஷ்ய விமான தயாரிப்பு பொருளாதார நன்மை தராது.

அதேவேளை சீனாவும் தனது C929 பயணிகள் விமான தயாரிப்பில் இருந்து ரஷ்யாவை விலக்கி உள்ளது. முன்னர் CR929 என்று அழைத்த இந்த சீன விமானத்தை (C: China, R: Russia) தற்போது C929 என்றே அழைக்கிறது. இந்த முரண்பாடுக்கான காரணங்கள் அறியப்படவில்லை.

உள்நாட்டு வளர்ச்சி காரணமாக சீனாவின் C919, C929 விமானங்களுக்கு சீன சந்தையே போதுமானது. C919 விமானம் ஏற்கனவே வேறு நாடுகளாலும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.