ரம்புக்கு கிறிஸ்மஸ் பரிசாக கிம்மின் ஏவுகணை?

Trump_Kim

இந்த வருட இறுதிக்குள், அதாவது டிசம்பர் 31 திகதிக்குள், அமெரிக்கா வடகொரியா மீதான தடைகளை கணிசமான அளவில் தளர்க்காது விடின், தான் ரம்புக்கு (Trump) பெரும் கிறிஸ்மஸ் பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாக வடகொரியா தலைவர் கிம் (Kim) கூறி உள்ளார். அதனால் அப்பகுதி வானம் மிகுந்த கண்காணிப்பில் உள்ளது.
.
2018 ஆம் ஆண்டு ரம்பும், கிம்மும் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளை தீர்க்க இணங்கி இருந்தனர். அன்றில் இருந்து கிம் நீண்ட தூரம் பாயக்கூடிய ICBM போன்ற ஏவுகணைகளை ஏவாது தவிர்த்தும் வந்திருந்தார். அனால் மேற்கொண்டு முன்னேற்றம் எதுவும் வடகொரியா விசயத்தில் இடம்பெறவில்லை.
.
தம் மீது நடைமுறை செய்யப்பட்ட தடைகள் இதுவரை நீக்கப்படாமையால் கிம் அண்மை காலங்களில் விசனம் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே கிம் பெரும் ஏவுகணைகளை மீண்டும் ஏவலாம் என்று கருதப்படுகிறது.
.
செய்மதிகள் மூலம் வடகொரியாவை அவதானிக்கும் அமைப்புகளும் வடகொரியா ஏவுகணை ஏவலுக்கு தயாராகுவதாக கூறுகின்றன.
.
சீன, தென்கொரிய, ஜப்பான் தலைவர்களும் நிலைமை கட்டுக்கடங்காது போவதை தவிர்க்க பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். வடகொரியாவுக்கான அமெரிக்க விசேட தூதுவர் Stephen Biegun சீன, தென்கொரிய, ஜப்பான் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
.
அடுத்த வருடம் Tokyo 2020 ஒலிம்பிக் இடம்பெறவுள்ளதால் கிம் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த முனையலாம்.
.