ரம்பின் வரியில் பெரும் தளர்வு, கனடிய வரி தொடரும்

ரம்பின் வரியில் பெரும் தளர்வு, கனடிய வரி தொடரும்

ரம்ப் கனடா மீது திணித்த மேலதிக இறக்குமதி வரியை வியாழன் மேலும் தளர்த்தியுள்ளார். ஆனால் கனடா நடைமுறை செய்த பதில் வரியை பின்வாங்க மறுத்துள்ளது.

கடந்த செவ்வாய் கனடாவில் இருந்து வரும் எரிபொருள் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கும் 25% புதிய இறக்குமதி வரியை ரம்ப் நடைமுறை செய்திருந்தார். 

பின் மறுநாள் புதன்கிழமை கனடாவில் இருந்து வரும் கார் உற்பத்திகளுக்கு 25% வரியில் இருந்து விதிவிலக்கு அளித்தார். பின் வியாழன் NAFTA வர்த்தக உடன்படிக்கைக்கு உட்பட்ட அனைத்து பொருட்களுக்கும் ஏப்ரல் 2ம் திகதி வரை விதிவிலக்கு அளித்துள்ளார். கனடாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களில் சுமார் 62% NAFTA வுள் அடங்கும்.

ஆனால் கனடா செவ்வாய்க்கிழமை அமெரிக்க பொருட்கள் மீது நடைமுறை செய்த பதில் இறக்குமதி வரியை தொடர்ந்தும் அறவிடுகிறது. கனடா நடைமுறை செய்யவிருந்த இரண்டாம் கட்ட வரிகளை மட்டுமே கனடா ஏப்ரல் 2ம் திகதிவரை கனடா பின்போட்டுள்ளது.

Ontario மாநில முதல்வர் Ford வரும் திங்கள் முதல் Ontario மாநிலத்தில் இருந்து New York, Minnesota, Michigan ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் மின்னுக்கு 25% ஏற்றுமதி வரி அறவிடப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த மாநிலங்களில் வாழும் சுமார் 1.5 மில்லியன் அமெரிக்கர் கனடிய மின்னை பெறுகின்றனர். 

அமெரிக்காவில் இருந்து கனடா ஊடு அலாஸ்கா செல்லும் பார வாகனங்களுக்கு புதிய வரி அறவிடவுள்ளதாக British Columbia முதல்வர் அறிவித்துள்ளார்.

வியாழன் ரம்புக்கும், ரூடோவுக்கும் இடையில் 50 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது ரம்ப் குறைந்தது 2 தடவைகள் தகாத வார்த்தைகளை உபயோகித்ததாக கூறப்படுகிறது.