யூக்கிறேனுக்கு Cluster குண்டுகளை வழங்கவுள்ளது அமெரிக்கா

யூக்கிறேனுக்கு Cluster குண்டுகளை வழங்கவுள்ளது அமெரிக்கா

ரஷ்யாவுடன் போரிடும் யூக்கிறேனுக்கு அமெரிக்கா கிளஸ்ட்டர் (cluster) குண்டுகளை வழங்கவுள்ளது.

பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கிளஸ்ட்டர் குண்டுகளை உலகில் 123 நாடுகள் தடை செய்துள்ளன (2018 முதல் இலங்கையும் தடை செய்துள்ளது). ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, யூக்கிறேன் உட்பட 71 நாடுகள் கிளஸ்ட்டர் குண்டுகளை தடை செய்யவில்லை.

ஒவ்வொரு கிளஸ்ட்டர் குண்டின் உள்ளும் பெருமளவு சிறிய குண்டுகள் இருக்கும். தாய் குண்டு எதிரியின் வானத்தில் வெடிக்க, சேய் குண்டுகள் பரந்த அளவில் வெடித்து அழிவை ஏற்படுத்தும்.

உதாரணமாக 155 mm Howitzers ஏவுகணை கிளஸ்ட்டர்  குண்டு ஒன்று 88 சேய் குண்டுகளை கொண்டிருக்கும். அந்த ஒவ்வொரு சேய் குண்டும் சுமார் 10 சதுர மீட்டர் பரப்பளவை தாக்கும். அதனால் ஒரு கிளஸ்ட்டர் குண்டு சுமார் 30,000 சதுர மீட்டர் பரப்பளவை தாக்கும்.

Red Cross கணிப்பின்படி சுமார் 10% முதல் 40% வரையான கிளஸ்ட்டர் குண்டுகள் வெடிப்பதில்லை. அதனால் அவை நீண்ட காலங்களுக்கு பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். வியட்நாமில் அமெரிக்கா வீசிய கிளஸ்ட்டர் குண்டுகள் பல தற்போதும், சுமார் 50 ஆண்டுகளின் பின், வெடிக்கும் நிலையில் பரவி உள்ளன.