இந்த மாதம் 6ஆம் திகதி கிழக்கு சீன கடலில் ஈரானின் Sanchi என்ற எண்ணெய் கப்பலும், CF Crystal என்ற Hong Kong கொள்கலன் கப்பலும் மோதி இருந்தன. இந்த மோதல் காரணமாக ஈரானிய எண்ணெய் கப்பல் தீ பற்றிக்கொண்டது. அந்த தீ இன்றுவரை எரிந்திருந்தது. இறுதியில், உள்ளூர் நேரப்படி ஞாயிறு பிற்பகல் 4:45 மணிக்கு அந்த கப்பல் தாழ்ந்தது.
.
எண்ணெய் கப்பலில் இருந்த 30 ஈரானியரும், 2 பங்களாதேசத்தவரும் தொலைந்து உள்ளனர். அந்த கப்பலில் இருந்து 2 உடல்களை மட்டும் சீனா சனிக்கிழமை மீட்டிருந்தது. தீப்பிடித்த இந்த கப்பல் எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற காரணத்தாலும், தீயால் உருவான வெப்பம் காரணமாகவும் மீட்பு வேலைகள் கடினமாக இருந்தன.
.
எரிந்து பின் தாழ்ந்த Sanchi என்ற கப்பல் 899 அடி நீளம் கொண்டது. விபத்தின் போது அந்த கப்பலில் 136,000 தொன் எண்ணெய் இருந்துள்ளது. இந்த எண்ணெய் கப்பல் ஈரானில் இருந்து தென்கொரியா செல்கையிலேயே விபத்துக்கு உள்ளாகியது.
.
கொள்கலன் கப்பலில் இருந்த அனைவரும் (21 பேர்) காப்பாற்றப்பட்டு உள்ளனர். இதில் தீ பரவி இருந்திருக்கவில்லை.
.