இன்று சனிக்கிழமை கனடாவின் Yukon மாகாண வான் பரப்பில் பறந்த இன்னோர் பறக்கும் பொருளை NORAD (North American Aerospace Defense Command) படையில் உள்ள அமெரிக்காவின் F-22 வகை யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இன்னோர் இவ்வகை பறக்கும் பொருள் அமெரிக்க யுத்த விமானதால் அலாஸ்கா மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தது.
இந்த இரண்டு பறக்கும் பொருள்கள் தொடர்பாக அமெரிக்கா விபரங்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. பதிலுக்கு இவற்றை unidentified object என்று மட்டுமே கூறுகிறது.
அதற்கு முன் சீனாவின் பலூன் ஒன்று அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தது. அமெரிக்கா அதை வேவு பார்க்கும் பலூன் என்று கூற, சீனா அதை தனது காலநிலை அவதானிப்பு பலூன் என்று கூறி இருந்தது.
இதுவரை காலமும் விமானங்கள் மட்டுமே இன்னோர் நாட்டின் வான் பரப்பில் அனுமதி இன்றி பறப்பது குற்றமாக காணப்பட்டது. ஆனால் மிக உயரத்தில் பறக்கும் செய்மதிகள் இன்னோர் நாட்டின் மேலால் பறப்பது குற்றமாக காணப்படவில்லை. மேற்படி 2 பொருட்களும், சீனாவின் பலூனும் இடைநிலை உயரத்தில் பறக்கும் வேளையிலேயே சுடப்பட்டுள்ளன.
ஒரு நாடு இடைநிலை உயரத்தில் பறக்கும் இன்னோர் நாட்டு வேவு பொருட்களை சுட்டு வீழ்த்தலாம் என்றால், செய்மதிகளும் சுட்டு வீழ்த்தப்படலாம் என்று கருதப்படலாம். ஆகவே மேற்படி 3 சுடுதலும் வான் பரப்பு விதிகளை மாற்றி அமைக்கலாம்.