First Republic Bank என்ற மூன்றாவது அமெரிக்க வங்கியும் முறிந்துள்ளது. இதன் சொத்துக்களை JP-Morgan Chase என்ற அமெரிக்க வங்கி கொள்வனவு செய்துள்ளது. இந்த கொள்வனவு விபரம் இன்று திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் First Republic வங்கி அமெரிக்காவின் 14வது பெரிய வங்கியாக இருந்தது. முடிந்த ஏப்ரல் மாதம் இதில் சுமார் $229 பில்லியன் பண வைப்புகள் இருந்தன.
First Republic வங்கி ஆபத்தில் உள்ளது என்று அறிந்தவுடன் அதன் பங்கு சந்தை பங்கின் பெறுமதி சுமார் 97% ஆல் வீழ்ந்து இருந்தது. அதாவது இந்த வங்கியின் பங்கை கொள்வனவு செய்தோர் தமது ஒவ்வொரு $100 லிலும் $97 ஐ இழந்து உள்ளனர்.
அமெரிக்காவில் Federal Deposit Insurance Corporation (FDIC) அங்கம் கொண்ட வங்கியில் வைப்பு செய்யப்படும் ஒரு தொகை FDIC ஆல் காப்புறுதி செய்யப்படும். தற்போது அத்தொகை $250,000 ஆகும்.
$250,000 க்கும் அதிகமான தொகையை வைப்பில் இட்டோர் பலரும் தமது தொகை காப்புறுதியில் அடைங்கவில்லை என்ற காரணத்தால் கடந்த மாதம் மீள பெற்றுள்ளனர்.
மேற்படி கொள்வனவு மூலம் JPMorgan வங்கி காப்புறுதிக்கு உட்பட்ட வைப்புகளை கையேற்கிறது. மொத்தம் 8 மாநிலங்களில் உள்ள 84 First Republic வங்கி கிளைகள் JPMorgan வங்கியாக மாற்றப்படும்.
First Republic Bank கடந்த 7 கிழமைகளில் முறியும் 3 வது அமெரிக்க வங்கியாகும். Silicon Valley Bank முதலில் முறிய, Signature Bank பின்னர் முறிந்து இருந்தது.