வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் முறுகி உள்ள நிலையிலும் தமக்கிடையே cold war நிலை இல்லை என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் கூறியுள்ளார். இந்தோனேசியாவில் இடம்பெறும் G20 நாடுகளின் அமர்வுக்கு சென்ற பைடென் சீன சனாதிபதி சீயை சந்தித்த பின்னரே இவ்வாறு கூறியுள்ளார்.
சீனா தற்போதைக்கு தாய்வானை ஆக்கிரமிக்காது என்றும் பைடென் கூறியுள்ளார்.
பைடெனும், சீயும் பல விசயங்கள் தொடர்பாக உரையாடி உள்ளனர். அமெரிக்கா தரப்பில் யூகிறேன் யுத்தம், தாய்வான், வடகொரியா ஆகிய விசயங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் இவை தொடர்பாக எந்தவித இணக்கமும் ஏற்படவில்லை.
தாய்வான் விசயம் ஒரு உள்நாட்டு விசயம் , அதில் தலையிட வெளியாருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று சீ கூறியுள்ளார். அத்துடன் தாய்வான் விசயத்தில் வெளியார் தலையிடுவது முதலாவது Red Line என்றும் சீ கூறியுள்ளார்.
அதேநேரம் யூகிறேன் யுத்தத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தக்கூடாது என்று சீ கூறியதை அமெரிக்கா வரவேற்று உள்ளது.
பல அமெரிக்க பத்திரிகைகள் சீனாவையே தற்போது 2ம் வல்லரசு ஆக கணிக்கின்றன. அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனம் அமெரிக்காவையும், சீனாவையும் 21ம் நூற்றாண்டின் இரண்டு superpowers என்று கூறியுள்ளது. U.S. News செய்தி சேவையும் அவ்வாறே அழைத்துள்ளது.
அமெரிக்க House தலைவி நான்சி பெலோஷி அண்மையில் தாய்வான் சென்றபின் சீனா அமெரிக்காவுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து இருந்தாலும் பைடென், சீ சந்திப்பின் பின்னர் சீனா சில தொடர்புகளை ஆரம்பிக்க இணங்கி உள்ளது. அதனால் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் விரைவில் பெய்ஜிங் செல்வார்.
அமெரிக்கா முடிந்த அளவு சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த தொடர்ந்தும் முனையும். அதனால் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தொடரும். குறிப்பாக அமெரிக்காவின் சீனா மீதான தொழில்நுட்ப தடை முரண்பாட்டை உக்கிரம் அடைய செய்யும்.
ரஷ்ய சனாதிபதி பூட்டின் G20 அமர்வுக்கு செல்லவில்லை.