முதியவரை அடிமையாக்கினர், Melbourne நீதிமன்றம் தீர்ப்பு

முதியவரை அடிமையாக்கினர், Melbourne நீதிமன்றம் தீர்ப்பு

அறுபது வயதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு பெண் ஒருவரை அடிமையாக வைத்திருந்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு 53 வயதுடைய குமுதினி கண்ணன் என்ற பெண் மீதும், 57 வயதுடைய அவரின் கணவன் கந்தசாமி கண்ணன் மீதும் அஸ்ரேலியாவின் Melbourne நகரில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தண்டனையை வழங்குவதற்கான வாதங்கள் இன்று செவ்வாய் இடம்பெற்றன. நீதிபதி John Champion வயோதிபரின் பராமரிப்பை “wholesale neglect” என்று விபரித்து உள்ளார்.

2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்திலேயே மேற்படி முதியவர் Melbourne நகர் பகுதியில் உள்ள Mount Waverly என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. முதியவரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட காலத்தில் அவர் 40 kg எடை கொண்டவராக இருந்துள்ளார்.

மேற்படி வயோதிபர் சமைப்பது, சுத்தமாக்குவது, பிள்ளைகளை பராமரிப்பது போன்ற சேவைகள் செய்ய 8 ஆண்டுகளாக பணிக்கப்பட்டு உள்ளார்.

ஆனாலும் தன்னை தினமும் 23 மணித்தியாலங்கள் பணிபுரிய வைத்தனர் என்று வயோதிபர் கூறுவதை எவரும் நம்ப முடியாது என்று தம்பதிகளின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு திரும்ப முடியாத வயோதிபர் தற்போது Melbourne நகரில் உள்ள வயோதிபர் விடுதியில் உள்ளார்.