கடந்த காலங்களில் உலகின் பல பாகங்களிலும் வீட்டு விலை நியாய விலைக்கும் மேலாக மிகையாக வளர்ந்து வந்திருந்தது. ஒரு வீட்டுக்கு நியாயமான விலை என்ன என்பதை கருத்தில் கொள்ளாது பலரும் முண்டியடித்து, போட்டிக்கு விலையை உயர்த்தி கொள்வனவு செய்திருந்தனர். அதனால் வீட்டு கொள்வனவு பங்கு சந்தை பங்கு கொள்வனவு போலாகியது.
கனடாவின் பல நகரங்களும் இவ்வகை போட்டியில் மூழ்கி இருந்தன. இதுவரை காலமும் கனடாவில் வீட்டு விலை மிக மலிவாக இருந்ததற்கு மிக குறைந்த கடன் வட்டியே காரணம். மத்திய வங்கியின் வட்டி ஏறக்குறைய பூச்சயம் ஆக இருந்தது. இதை பலரும் free money என்றனர். ஆனால் தற்போது நிலை தலைகீழாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அளவில் கனடிய மத்திய வங்கியின் வட்டி 0.25% ஆக மட்டுமே இருந்தது. ஆனால் அது தற்போது 5.25% ஆக அதிகரித்து உள்ளது. இந்த 5% அதிகரிப்பு வீட்டு கடனின் மாதாந்த கட்டுமானமும் அதே அளவில் அதிகரிக்கும். மில்லியன் பெறுமதியான வீடுகளின் மாதாந்த கட்டண உயர்வு சாதாரணமானது அல்ல.
Toronto நகரை அண்டிய, புஞ்சபி மக்கள் அதிகம் வாழும் Brampton பகுதியில் Gurcharan Rehal என்பவர் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றை C$1.959 மில்லியனுக்கு கொள்வனவு செய்ய கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் ஒப்பந்தம் செய்து இருந்தார். அத்துடன் வீட்டில் சில சுய விருப்பங்களை அமைக்க மேலும் $90,000 விலையுடன் இணைக்கப்பட்டது. அப்போது அவர் C$260,000 முதலும் செலுத்தி இருந்தனர். அந்த வீட்டின் கட்டு வேலைகள் தற்போது முடிவதால் அவர்கள் வீட்டை பொறுப்பு எடுக்கும் நேரம் இது.
ஆனால் வங்கி கணிப்பில் அந்த வீட்டின் தற்போது C$1.7 மில்லியன் மட்டுமே. அதாவது சுமார் C$300,000 ஆவியாகி உள்ளது. அது மட்டுமன்றி வீட்டு விலை வீழ்ச்சி அடைய காரணமாக இருந்த வட்டி அதிகரிப்பு வீட்டு கடனின் மாதாந்த கட்டுமானத்தையும் அதிகரித்து உள்ளது. ஆண்டின் ஆரம்பத்தில், கனடிய மத்திய வங்கி வட்டி 0.25% ஆக இருந்த காலத்தில் இவரின் கடனுக்கான மாத கட்டுமானம் C$5,000 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் அது தற்போது C$12,000 முதல் C$15,000 ஆகி உள்ளது. மாதாந்தம் இவ்வளவு அதிகரித்த தொகையை வேலைவாய்ப்பு மூலம் பெறுவது இலகுவல்ல. இவர்கள் வீட்டை கைவிட்டால், செலுத்திய முதல் $260,000 பறிபோகும்.
இப்பகுதியில் இன்னோர் வீடு $1.9 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டு இருந்தாலும் தற்போது அது $1.6 மில்லியன் மட்டுமே. அத்துடன் மாதாந்த கட்டணமும் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
Brampton பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் சராசரி வீட்டு விலை C$1,608,894 என்றும் நவம்பர் மாதம் இங்கு சராசரி விலை C$1.197,119 ஆக உள்ளது என்றும் Toronto Real Estate Board கூறுகிறது. அதாவது சுமார் $400,000 வீழ்ச்சி, அல்லது 25% வீழ்ச்சி.
கடந்த காலங்களில் Toronto வீடு ஒன்றை விற்பனை செய்தால் அந்த பெறுமதிக்கு அதே அளவிலான வீடுகள் இரண்டு அல்லது மூன்றை அமெரிக்காவின் சிக்காகோ போன்ற நகரங்களில் கொள்வனவு செய்திருக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு நல்ல ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்பு Toronto நகரில் இருந்ததில்லை.