சனநாயக முறைப்படி பதிவியில் இருந்த ஆட்சியை இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் விலக்கி அதிகாரத்துக்கு வந்திருந்த மியன்மார் இராணுவம் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்து உள்ளது. அத்துடன் அமெரிக்காவில் இருந்த $1 பில்லியன் வைப்புக்களையும் அமெரிக்கா முடக்கி உள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று புதன் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் இருந்து மியன்மாருக்கான ஏற்றுமதியிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் மியன்மார் மக்களுக்கான நேரடி சுகாதார மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் தொடரும் என்றும் பைடென் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் தாம் மேலதிக தடைகளை மியன்மார் இராணுவம் மீது விதிக்க தயார் என்றும் பைடென் கூறி உள்ளார். சில தினங்களுள் தடை செய்யப்படும் இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் என்றும் பைடென் கூறி உள்ளார்.
2011ம் ஆண்டில் $48.9 மில்லியன் ஆக இருந்த மியன்மாருக்கான அமெரிக்காவின் ஏற்றுமதி 2020ம் ஆண்டில் $338 மில்லியன் ஆக அதிகரித்து இருந்தது. மியன்மார் சீனாவின் கையில் விழுவதை தடுக்க அமெரிக்கா கடுமையாக முனைந்து வந்திருந்தது. இந்த மாதம் 1ம் திகதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதன் பின் அமெரிக்கா விசனம் கொண்டிருந்தது.
அங்கு இராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் என்றும் இல்லாதவாறு அதிகரிக்க, இராணுவமும் படிப்படியாக கடுமையான அணுகுமுறைகளை கையாள ஆரம்பித்து உள்ளது.