மாலைதீவில் இருந்து இலங்கைக்கு இந்திய சீனி 

மாலைதீவில் இருந்து இலங்கைக்கு இந்திய சீனி 

இந்திய அரசு மாலைதீவுக்கு மட்டும் என்று அனுமதி வழங்கிய இந்திய சீனியின் ஒரு பகுதி இடைவழியில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை இந்திய Directorate-General of Foreign Trade (DGFT) தற்போது விசாரணை செய்கிறது.

உள்நாட்டு உற்பத்தி குறைந்ததாலும், இந்தியாவின் சில இடங்களில் தேர்தல் இடம்பெற்றதாலும் இந்தியா சீனி ஏற்றுமதியை இடைநிறுத்தி இருந்தது. ஆனால் மாலைதீவை சீனாவில் இருந்து தன் பக்கம் இழுக்க மாலைதீவுக்கு மட்டும் மலிவு விலையில் 64,000 தொன் சீனியை ஏற்றுமதி செய்ய இந்தியா அக்டோபர் 25ம் திகதி அனுமதித்து இருந்தது.

ஆனால் அக்டோபர் மாதம் இந்தியாவின் Nhava Shiva துறைமுகத்தில் இருந்து மாலைதீவு செல்லவிருந்த 80 சீனி கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

இலங்கையும் இந்த இறக்குமதியை முடக்கி வைத்து விசாரணை செய்கிறது. 

இந்த சீனியை இறக்குமதி செய்த இலங்கை நிறுவனம் இதுவரை அறியப்படவில்லை. ஏற்றுமதி ஆவணங்களில் ‘to be advised’ என்று மட்டும் உள்ளதாம். (கப்பல் மூல வர்த்தகத்தில் இப்படி ஒரு நடைமுறை உள்ளது)

இந்த சீனியை காவி வந்த கப்பலுக்கு இலங்கை நிறுவனம் $156,600 கட்டணத்தை UAE கப்பல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும்.

அத்துடன் இந்தியாவில் இருந்து மாலைதீவுக்கு என்று ஏற்றுமதி செய்யப்பட்ட சீனியின் ஒரு தொகை மலேசியாவின் Klang துறைமுகத்துக்கு சென்றுள்ளதாம்.