அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் இன்று இடம்பெற்ற சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் அந்த மாநில இஸ்லாமிய மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை திடமாக காட்டி உள்ளனர். காசா யுத்தத்தில் இஸ்ரேலுக்கு பைடென் கண்மூடித்தனமான ஆதரவு வழங்குவதே இஸ்லாமியரின் வெறுப்புக்கு காரணம்.
Michigan தேர்தலில் போட்டியிடுபவர்கள் எவருக்கும் வாக்களிக்க விரும்பாத ஒருவர் “Uncommitted” என்ற வகைக்கு வாக்களிக்கலாம்.
இன்று இடம்பெற்ற Democratic கட்சியின் உட்கட்சி தேர்தலில், 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பைடெனுக்கு கிடைத்த வாக்குகள் 617,728 (81.1%). Uncommitted பெற்ற வாக்குகள் 100,960 (13.3%). அதேவேளை Republican கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ரம்ப், 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பெற்ற வாக்குகள் 755,909.
Uncommitted வகைக்கு அதன் ஆதரவாளர் பெற விரும்பியது சுமார் 10,000 வாக்குகள் மட்டுமே.
அமெரிக்காவில் 50 மாநிலங்கள் இருந்தாலும் ஒரு தொகுதி மாநிலங்கள் எப்போதுமே Democratic கட்சிக்கும், இன்னொரு தொகுதி மாநிலங்கள் எப்போதுமே Republican கட்சிக்கும் வாக்களிப்பவை. அதனால் swing states என்று அழைக்கப்படும் ஒரு சில மாநிலங்களே உண்மையில் சனாதிபதியை தீர்மானிக்கும். Michigan ஒரு பிரதான swing state. அதை இழப்பது வெற்றிக்கான வாய்ப்பை குறைக்கும்.
2016ம் ஆண்டு சனாதிபதியான ரம்ப் இங்கு பெற்றது 47.50% வாக்குகள். தோல்வியுற்ற ஹெலரி பெற்றது 47.27% வாக்குகள்.
2020ம் ஆண்டு சனாதிபதியான பைடென் இங்கு பெற்றது 50.62% வாக்குகள். தோல்வியுற்ற ரம்ப் பெற்றது 47.84% வாக்குகள்.