இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய 41 கனடிய தூதரக ஊழியர்கள் வியாழன் இரகசியமாக இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்கள் எந்த நாட்டுக்கு சென்றார்கள் என்பது கூறப்படவில்லை.
மேலதிக கனடிய அதிகாரிகளை அக்டோபர் 10ம் திகதிக்கு முன் வெளியேற்றுமாறு இந்தியா கூறி இருந்தாலும், கனடா இதுவரை அதை கவனத்தில் எடுக்காது இருந்தது.
ஜூன் 19ம் திகதி Hardeep Singh Nijjar என்ற சீக்கிய தீவிரவாதி கனடாவின் கொலம்பியா மாநிலத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டதில் இந்தியாவின் கை உள்ளது என்று ரூடோ கூறியதால் விசனம் கொண்ட இந்தியா கனடா மீது முரண்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
கனடியார்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்போது நிறுத்தி உள்ளது. அத்துடன் இந்தியாவில் உள்ள கனடிய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்தியா கேட்டுள்ளது.
கனடாவில் 21 இந்திய அதிகாரிகள் மட்டும் உள்ளதாகவும், இந்தியாவில் 62 கனடிய அதிகாரிகள் உள்ளதாகவும் இந்தியா குற்றம் கூறுகிறது. அதனால் இந்தியாவில் இருக்கும் கனடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 21 ஆக குறைக்கும்படி கூறுகிறது இந்தியா.
ஆனால் கனடாவில் 60 இந்திய அதிகாரிகள் உள்ளதாக கூறுகிறது கனடா. அத்துடன் இந்தியாவில் பெருமளவு இந்தியர் கனடிய விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்றும் அதனால் வேலைப்பளு அதிகம் என்று கூறுகிறது கனடா.
Australian Security Intelligence Organization தலைமை அதிகாரி Mike Burgess இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டை ஏற்று கொண்டாலும், பொதுவாக NATO, Five Eyes நாடுகள் கனடாவின் உதவிக்கு வரவில்லை. சீனாவுடன் மோதும் அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம். பிரித்தானியா இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்ய முனைகிறது. இந்தியாவுக்கு பெருமளவு Rafael யுத்த விமானங்களை விற்பனை செய்ய முனைகிறது.