அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagan) ஆண்டுதோறும் காங்கிரசுக்கு சமர்ப்பிக்கும் எதிரிகளின் படை பலம் தொடர்பான இந்த ஆண்டுக்கான அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் வளர்ச்சியையிட்டு பென்ரகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவே தற்போது உலகத்தில் அதிசிறந்த hypersonic (ஒலியின் வேகத்திலும் குறைந்தது 5 மடங்கு வேகத்தில் செல்லும்) ஏவுகணைகளை கொண்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்த ஏவுகணைகள் இந்து-பசிபிக் பகுதிகளில் எந்த குறியையும் தாக்க வல்லன என்கிறது பென்ரகன் அறிக்கை. அமெரிக்காவின் மிகப்பெரிய தளமான குவாம் (Guam) இந்த எல்லைக்குள் அடங்கும். இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணைகள் தடுக்க முடியாதிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவின் DF-17, DF-26, DF-27 hypersonic ஏவுகணைகள் இந்து-பசுபிக் பகுதில் உள்ள அமெரிக்காவின் தளங்களையும், ஹவாய், அலாஸ்கா போன்ற பகுதிகளையும் இலகுவில் தாக்கும் என்கிறது மேற்படி அறிக்கை.
இந்த ஆண்டு சீனா $224 பில்லியன் பாதுகாப்புக்கு செலவழித்து என்று அறிவித்தாலும் உண்மையில் சீனா $350 பில்லியன் முதல் $450 பில்லியன் வரை செலவழித்து உள்ளது என்கிறது பென்ரகன் அறிக்கை. அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு $880 பில்லியன் செலவழித்தாலும் அதில் பெரும் பங்கு படைகளின் ஊழியம், வசதிகள் போன்றவற்றுக்கே பயன்படும்.
சீனாவிடம் தற்போது 370 யுத்த கப்பல்களும், நீர்மூழ்கிலும் உள்ளன என்கிறது மேற்படி அறிக்கை. அமெரிக்காவிடம் தற்போது 290 யுத்த கப்பல்கள் மட்டுமே உள்ளன.
சீனாவிடம் சுமார் 2,000 யுத்த விமானங்கள் உள்ளன என்றும் அதில் 1,200 விமானங்கள் அமெரிக்க, ஐரோப்பிய யுத்த விமான தரத்தில் உள்ளன என்றும் அறிக்கை கூறியுள்ளது.