மிக நீண்ட காலமாக ஜப்பானியர் தம்மை ஒரு புனித இனமாக கருதியிருந்தனர். சீனர், கொரியர் எல்லாம் ஜப்பானியர் பார்வையில் புனிதம் குறைந்த இனமாகவே கருதப்பட்டனர். தமது இனத்துள் வேறு இனங்களை கலப்பதை விரும்பாத ஜப்பான் அங்கு வெளியார் சென்று குடியேறுவதை முற்றாக தவிர்த்து இருந்தனர்.
ஆனால் வேகமாக அழிந்து வரும் அந்நாட்டின் சனத்தொகை காரணமாக ஜப்பான் வெளிநாட்டினரை அழைக்க ஆரம்பித்து உள்ளது. இதுவரை தொழிலாளரை மட்டும் அழைத்த ஜப்பான் தற்போது தொழிலாளரின் குடும்பங்களையும் அழைக்க வசதி செய்கிறது.
2019ம் ஆண்டு நடைமுறைக்கு வந்திருந்த சட்டம் உழவு, தாதி, சுத்தமாக்கல் போன்ற தொழில் செய்வோருக்கு தொழில் விசா வழங்கி வருகிறது. ஆனால் அந்த சட்டப்படி மேற்படி தொழிலாளர் 5 ஆண்டுகள் மட்டுமே ஜப்பானில் வாழும் உரிமை கொண்டிருந்தனர். அத்துடன் அந்த தொழிலாளர் தமது குடும்ப உறவுகளை ஜப்பான் அழைக்கும் உரிமையை கொண்டிருக்கவில்லை.
மேற்படி நிபந்தனைகள் காரணமாக வெளிநாட்டு தொழிலாளர் ஜப்பான் செல்வதை தவிர்த்தனர். 2019ம் ஆண்டு சட்டம் மாதம் சுமார் 5,750 பேரை உள்வாங்க முனைந்து இருந்தாலும், மாதம் சுமார் 3,000 தொழிலாளரே ஜப்பான் சென்றனர்.
தொழிலாளர் வரைவை அதிகரிக்க விரும்பும் ஜப்பான் தற்போது மேற்படி தொழிலாளர் காலவரையறை இன்றி ஜப்பானில் வாழ உரிமை வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் தொழிலாளர் தமது குடும்பங்களையும் ஜப்பான் அழைக்க வழி செய்யப்படுகிறது. நீண்ட காலம் வாழும் இவர்கள் ஜப்பானியருடன் கலக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும் ஜப்பானியர் அதையிட்டு தற்போது கவலை கொள்ளவில்லை.
இந்த புதிய சட்டத்தால் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தொழிலாளர் அதிக நன்மை அடைவர். சீனர் இலகுவில் ஜப்பானிய மொழியை கற்க முடியும்.