பிரித்தானியாவில் தற்போது எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. இதற்கு Brexit, கரோனா இரண்டுமே பிரதான காரணிகளாக கருதப்படுகிறது. உண்மையில் அங்கு எரிபொருள் போதிய அளவில் உண்டு. எரிபொருள் வண்டிகளை செலுத்த HGV (Heavy Goods Vehicle) சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே எரிபொருள் வழங்கலில் இடர்ப்பாடு தோன்றியுள்ளது.
Brexit க்கு முன்னைய காலங்களில் பெருமளவு ஐரோப்பியர் பிரித்தானியாவில் எரிபொருள் வண்டி சாரதிகளாக இருந்துள்ளனர். Brexit க்கு பின் அவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பி உள்ளனர். அதனால் பிரித்தானியா திடீரென HGV சாரதிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.
அதேவேளை கரோனா காரணமாக ஓய்வூதிய வயதை அடைந்த HGV சாரதிகளும் வழமையிலும் அதிக அளவில் ஓய்வு பெற்று உள்ளனர். ஆனாலும் கரோனா காரணமாக புதிய HGV சாரதிகளுக்கான சோதனைகள் பின்போடப்பட்டதால், புதிய HGV சாரதிகள் சேவைக்கு வருவதும் குறைந்து உள்ளது.
எரிபொருள் மட்டுமன்றி உணவு பொருட்களை காவவும் HGV சாரதிகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. பிரித்தானியாவில் தற்போது சுமார் 100,000 மேலதிக HGV சாரதிகள் தேவைப்படுகின்றனர்.
பிரித்தானிய அரசு 5,000 HGV சாரதிகளுக்கு தற்காலிக விசா வழங்க முன்வந்துள்ளது. ஓய்வு பெற்ற சாரதிகளையும் மீண்டும் சேவைக்கு அழைக்கிறது. இராணுவ சாரதிகளும் அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பயம் கொண்ட மக்கள் வழமைக்கு மேலாக எரிபொருளை கொள்வனவு செய்வதும் நிலைமையை மோசமாக்குகிறது. வழமையாக நாள் ஒன்றில் சுமார் 30,000 லீட்டர் எரிபொருள் விற்பனை செய்யப்படும் Maexteg என்ற இடத்தில் கடந்த தினம் 100,000 லீட்டர் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.