அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி மீண்டும் ஒரு உளறலை சனிக்கிழமை விடுத்துள்ளார். பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்படி பனாமாவிடம் கேட்க உள்ளாராம் ரம்ப். பனாமா கால்வாய் ஊடே செல்லும் கப்பல்களிடம் பனாமா அரசு மிகையான தொகையை அறவிடுகிறது என்பதே ரம்பின் குற்றச்சாட்டு.
அத்துடன் இந்த கால்வாய் “wrong hands” களின் வசமாகிவிடும் என்றும் ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் wrong hands என்று குறிப்பிடுவது சீனாவையே என்று கருதப்படுகிறது.
இந்த கால்வாயை அமெரிக்காவே கட்டி இருந்தது. ஆனால் 1999ம் ஆண்டு சட்டப்படி இந்த கால்வாயை பனாமா அரசிடம் அமெரிக்கா கையளித்துள்ளது.
இந்த பனாமா கால்வாயும் அமெரிக்காவின் அடாவடி தனத்துக்கு ஒரு சிறந்த உதாரணம்.
தற்போது பனாமா என்று அழைக்கப்படும் நாடு முன்னர் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் (Colombia) அங்கமாகவே இருந்தது. இப்பகுதியின் ஊடு கால்வாய் ஒன்றை கட்ட விரும்பிய அமெரிக்கா கொலம்பியாவுடன் அமெரிக்காவுக்கு சாதகமான இணக்கம் ஒன்று வர முடியாது இருந்தது.
உடனே பனாமா பகுதி மக்களை தூண்டி, உதவிகள் செய்து அவர்களை கொலம்பியாவில் இருந்து விடுதலை அடைய செய்ய வைத்தது அமெரிக்கா. 1903ம் ஆண்டு விடுதலை அடைந்த பனாமா அமெரிக்காவை கால்வாய் கட்ட அனுமதித்தது. இந்த 83 km நீள கால்வாய் 1914ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
1983ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற ஜெனரல் நோறியேகாவுக்கு (Noriega) அமெரிக்கா முதலில் உதவியது. அமெரிக்காவின் CIA நொறியேகா மூலம் மத்திய அமெரிக்க கிளர்ச்சியாளருக்கு ஆயுதங்களை வழங்கியது. ஆனால் பின்னர் நொறியேகாவுக்கு எதிராக திரும்பியது அமெரிக்கா.
1989ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி அமெரிக்க படைகள் பனாமாவை ஆக்கிரமித்தன. நொறியேக கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு எடுத்து செல்லப்பட்டார். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஐ.நா. General Assembly கண்டித்தாலும், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் தமது வீட்டோ வாக்குகள் மூலம் ஐ.நா. முயற்சிகளை தடுத்தன.