படைகளை மெல்ல பின்வாங்கும் சீனா, இந்தியா

படைகளை மெல்ல பின்வாங்கும் சீனா, இந்தியா

சீனாவும், இந்தியாவும் தமது படைகளை சில எல்லை பகுதிகளில் இருந்து பின் நகர்த்துகின்றன. இமய மலைக்கு மேற்கே Gorga Hot Spring பகுதியில் நிலைகொண்டிருந்த இரு தரப்பு படைகளுமே தற்போது எல்லையோரத்தில் இருந்து பின் நகர்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற ஆயுதம் அற்ற மோதலுக்கு 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் பலியாகி இருந்தனர். அன்றில் இருந்து இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்துள்ளது.

ஆனாலும் இருதரப்பு படையினரும் தொடர்ந்தும் பேச்சுக்களை தொடர்ந்தனர். இதுவரை இருதரப்பு இராணுவ அதிகாரிகளும் 16 தடவைகள் சந்தித்து உரையாடி உள்ளனர்.

திங்கள் 12ம் திகதிக்குள் இருதரப்பும் தமது படைகளை இப்பகுதியில் இருந்து முற்றாக பின்னெடுத்து இருக்கும்.

சீன பாதுகாப்பு அமைச்சும், இந்திய வெளியுறவு அமைச்சும் தமது படைகளின் பின் நகர்வை உறுதி செய்துள்ளன.

அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற Vostok 2022 யுத்த பயிற்சியிலும் சீனாவும், இந்தியாவும் பங்கெடுத்து இருந்தன.

அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் தாம் செய்ததுபோல் சீனாவின் Huawei Technologies நிறுவனத்தை இந்திய 5G கட்டுமானத்தில் இருந்து விலக்க இந்தியாவை கேட்டிருந்தாலும், இந்தியா Huawei நிறுவனத்தை அவ்வாறு விலக்கவில்லை.

அடுத்த கிழமை உஸ்பெகிஸ்தான் நாட்டில் இடம்பெறவுள்ள SCO (Shanghai Cooperation Organization) அமர்வில் சீன சனாதிபதியும், இந்திய பிரதமரும் கலந்து கொள்வர்.