முன்னைய காலத்தில் தங்கம் போன்ற வெகுமதிகள் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக கொள்வனவுகளுக்கு பயன்பட்டன. ஆனால் விரைவில் அமெரிக்க டாலர் உலக வர்த்தக நாணயம் ஆனது.
அமெரிக்க டாலர் அமெரிக்க அரசின் சொத்து என்பதால் அமெரிக்கா தான் வெறுக்கும் நாடுகளை தண்டிக்க தனது டாலரை பயன்படுத்த ஆரம்பித்தது. இதனால் பல எதிரி நாடுகள் இடருக்கு உள்ளாகின.
அமெரிக்கா தன்னை அமெரிக்க டாலர் பாவனை மூலம் கட்டுப்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் சீனா தனது நாணாயமான யுவானை (Yuan அல்லது Renminbi) சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்த திட்டம் தீட்டியது. அந்த திட்டம் தற்போது திடமாக வளர்ந்து வருகிறது.
மார்ச் மாதம் சீனா வெளிநாடுகளுடனான தனது வர்த்தகத்தை தனது யுவான் மூலமே அதிகம் செய்துள்ளது. அமெரிக்க டாலர் மூல வர்த்தகம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த கிழமை ஆர்ஜென்டினாவும் சீனாவுடனான வர்த்தகத்தை சீன யுவான் மூலமே செய்யவுள்ளதாக கூறியுள்ளது. ரஷ்யா, பிரேசில், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியனவும் சீன யுவான் மூலமே வர்த்தகத்தை செய்ய ஆரம்பித்து உள்ளன.
யுக்கிறேன் ஆக்கிரமிப்புக்கு முன் 1% ரஷ்ய வர்த்தகம் யுவான் மூலம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 40% முதல் 45% ரஷ்ய வர்த்தகம் யுவான் மூலம் செய்யப்படுகிறது.
தற்போதும் அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் ஆளுமை கொண்டிருந்தாலும், யுவான் திடமாக வளர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டின் ஆரம்ப காலத்தில் உலக வர்த்தகத்தின் 1.3% மட்டுமே யுவான் மூலம் செய்யப்பட்டது. தற்போது அது 4.5% ஆக அதிகரித்து உள்ளது. ஆனாலும் அமெரிக்க டாலர் மூல வர்த்தகம் 84% ஆக உள்ளது.