சுமார் 12 ஆண்டுகள் இஸ்ரேலில் பிரதமராக ஆட்சி செய்த நெட்டன்யாகுவை (Netanyahu) விரட்டி, எதிர்க்கட்சிகள் புதியதோர் கூட்டு அரசை இன்று ஞாயிரு அமைத்து உள்ளன. இந்த 8-கட்சி கூட்டு அரசு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாவிட்டாலும், இதுவரை சந்தர்ப்பவசமாக பிரதமர் பதவியில் இருந்த நெட்டன்யாகு இன்று விரட்டப்பட்டு உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் இஸ்ரேலில் 4 தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை பெற்று இருக்கவில்லை. அதனால் நெட்டன்யாகுவே தொடர்ந்தும் இடைக்கால பிரதமராக ஆட்சி செய்தார். இறுதியாக இடம்பெற்ற தேர்தலிலும் நெட்டன்யாகு ஆட்சி அமைக்க போதிய ஆசனங்களை பெறவில்லை.
இறுதி தேர்தலில் Likud என்ற நெட்டன்யாகுவின் கட்சி 30 ஆசனங்களையும், Likud சார்பு கட்சிகள் 29 ஆசனங்களையும் பெற்று இருந்தன. அதனால் அவர்களுக்கு கிடைத்த மொத்த ஆசனங்கள் 59 மட்டுமே. அத்தொகை 120 ஆசனங்களை கொண்ட அவையில் ஆட்சி செய்ய போதியதல்ல.
அதேவேளை Yesh Atid (17), Blue and White (8), Yisrael (7), Labor (7), Yamina (6), New Hope (6), Meretz (6), United Arab List (4) ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணி 61 ஆசனங்களை கொண்டு ஆட்சி அமைகின்றன.
புதிய அரசில் 6 ஆசனங்களுடன் கூட்டணிக்கு வந்திருந்த Yamina என்ற கட்சி தலைவர் Naftali Bennett முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமர் ஆகிறார். அதன் பின் Yesh Lapid கட்சி தலைவர் பிரதமர் பதவியை கொண்டிருப்பார்.
தற்போதைய கூட்டணியின் ஓர் அங்கத்தவர் விலகினாலும் புதிய ஆட்சி கவிழும். இந்த கூட்டணியில் உள்ளோர் பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் ஒவ்வாத கொள்கைகளை கொண்டோரே.