தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் நீர்மூழ்கியான ARA San Juan 2017 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி முதல் தொடர்புகள் எதுவும் இன்றி தொலைந்து இருந்தது. ஒரு வருடத்தின் பின், தற்போது அந்த நீர்மூழ்கியின் இருப்பிடம் அறியப்பட்டுள்ளது.
.
இந்த நீர்மூழ்கி தொலைந்தவுடன் பல நாடுகள் தமது படைகளை அனுப்பி தேடுதல் பணியில் ஈடுபட்டன. நீர்மூழ்கியுள் ஒரு கிழமைக்கு சுவாசத்துக்கு போதுமான வளி இருக்கும் என்பதால் காப்பாற்றும் முயற்சிகள் இடம்பெற்றன. ஆனால் பல கிழமைகளில் பின், நீர்மூழ்கியின் இருப்பிடம் அறியப்படாத நிலையில், மற்றைய நாடுகள் தேடல் பணியில் இருந்து விலகிக்கொண்டன.
.
தேடுதலுக்கு போதிய வசதிகள் இல்லாத ஆர்ஜென்டீனா, அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்ட Ocean Infinity என்ற நிறுவனத்தின் உதவியை, $7.5 மில்லியன் வழங்கி, நாடி இருந்தது. அவர்களே ARA San Juan என்ற இந்த நீர்மூழ்கியின் இருப்பிடத்தை அறிந்துள்ளனர்.
.
சுமார் 900 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்த நீர்மூழ்கி உடைந்து, பாகங்கள் பரவிய நிலையில் உள்ளது. தெற்கில் உள்ள Ushuaia கடற்படை தளத்தில் இருந்து வடக்கில் உள்ள Mar del Plata கடற்படை தளம் நோக்கி செல்கையில் விபத்துக்குள்ளான இந்த நீமூழ்கியில் 44 படையினர் இருந்துள்ளனர்.
.
உடைந்த இந்த நீர்மூழ்கியும், பலியான படையினரும் மீட்கப்படுவார்களா என்பதை ஆர்ஜென்டீனா இதுவரை அறிவிக்கவில்லை.
.