நட்டத்தில் இயங்கும் Sri Lankan விமான சேவையை விற்பனை செய்ய பலமுறை இலங்கை அரசு முனைந்திருந்தாலும் எவரும் இதை கொள்வனவு செய்ய முன்வந்திருக்கவில்லை. கடைசி கேள்விக்கான இறுதி நாள் இன்று செவ்வாய். இம்முறையும் எவரும் கொள்வனவு செய்ய முன்வரவில்லை.
அதனால் கேள்விக்கான இறுதி நாள் மேலும் 45 தினங்களால் நீடிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த விமான சேவையை கொள்வனவு செய்ய முன்வரும் தரப்புக்கு மேலும் $510 மில்லியன் பணம் வழங்கவும் இலங்கை அரசு தற்போது முன்வந்துள்ளது. இந்த பணம் விமான சேவையின் கடனின் ஒரு பகுதியை அடைக்க உதவும்.
இந்த விமான சேவைக்கு $1.973 பில்லியன் ($1,973 மில்லியன்) கடன் உண்டு.
எவேறும் கொள்வனவு செய்ய முன்வராத இடத்தில் மேலும் 6 மாதங்களுக்கு விமான சேவையை நீடிக்க $60 முதல் $70 மில்லியன் வரை செலவு செய்யவும் இலங்கை அரசு முன்வந்துள்ளது.
2008ம் ஆண்டுக்கு முன் டுபாயின் Emirates விமான சேவையுடன் இணைந்து இயங்கிய காலத்தில் Sri Lankan இலாபத்தில் இயங்கியது.
2008ம் ஆண்டு பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து கொழும்பு பறக்கவிருந்த 35 பயணிகளை தள்ளிவிட்டு அந்த ஆசனங்களில் திடீரென தோன்றிய தனது உறவினர்களை அனுப்ப மகிந்த ராஜபக்ச முனைந்திருந்தார். ஆனால் Emirates நிர்வாகம் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டது.
விசனம் கொண்ட மகிந்த உடனே Emirates-Sri Lankan வர்த்தக உறவை முறித்துக்கொண்டார். அன்றிலிருந்து Emirates வழங்கும் பயணிகளை Sri Lankan இழந்து நட்டத்தில் இயங்க ஆரம்பித்தது.