தென் ஆபிரிக்காவுக்கான உதவிகளை நிறுத்தும் ரம்ப் 

தென் ஆபிரிக்காவுக்கான உதவிகளை நிறுத்தும் ரம்ப் 

அமெரிக்கா தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கிவரும் உதவிகளை சனாதிபதி ரம்ப் வெள்ளிக்கிழமை executive order மூலம் நிறுத்தியுள்ளார். இவ்வாறு உதவிகளை நிறுத்தியமைக்கு ரம்ப் இரண்டு காரணங்கள் கூறியுள்ளார்.

ஒன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்களுக்கு தென் ஆபிரிக்க அரசு துரோகம் செய்கிறது என்பது. வெள்ளையரின் காணிகளை தென் ஆபிரிக்க அரசு பறிக்கிறது என்று கூறுகிறார் ரம்ப். இரண்டாவது இஸ்ரேலின் காசா யுத்தத்தை தென் ஆப்பிரிக்கா எதிர்க்கிறது என்றும் ரம்ப் சாடியுள்ளார் ரம்ப்.

2023ம் ஆண்டு அமெரிக்கா தென் ஆப்பிரிக்காவுக்கு $440 மில்லியன் உதவி வழங்கி உள்ளது. அதில் $270 மில்லியன் USAID மூலம் வழங்கப்பட்டது. ரம்ப் USAID சேவையை உலக அளவில் முற்றாக நிறுத்தி உள்ளார்.

மொத்தம் 62 மில்லியன் மக்களை கொண்ட தென் ஆப்ரிக்காவில் 80% கருப்பு இனத்தவர். வெள்ளையர் 7% சனத்தொகையை மட்டும் கொண்டவர். ஆனால் வெள்ளையர் தற்போதும் சுமார் 70% தனியார் நிலங்களை உரிமை கொண்டுள்ளனர்.

2021ம் ஆண்டு ஆய்வு ஒன்றின்படி 64% கருப்பர் தற்போதும் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். ஆனால் வெள்ளையரில் 1% மட்டுமே வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். கருப்பர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நெல்சன் மண்டேலா கருப்பர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதுவும் செய்திருக்கவில்லை.

தற்போது ரம்பின் வலதுகரமாக உள்ள, உலகின் முதலாவது செல்வந்தரான Elon Musk தென் ஆபிரிக்காவில் பிறந்து, கனடா சென்று குடியுரிமை பெற்று பின் அமெரிக்கா சென்று 2002 இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற வெள்ளையர்.

Afrikaners என்று அழைக்கப்படும் வெள்ளையர் 300 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்த டச், பிரென்ச், மற்றும் ஜேர்மன் வெள்ளையர். இவர்கள் பேசும் Afrikaans என்ற மொழி டச் மொழியில் இருந்து மருவியது. பின் வந்த பிரித்தானியர் மிகுதி வெள்ளையர் ஆவர்.