2020ம் ஆண்டு தென்கொரியாவில் சனத்தொகை 20,838 பேரால் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறது அந்நாட்டு Ministry of Interior and Safety. அங்கு கடந்த ஆண்டு மரணத்தொகை 307,764 ஆகவும், பிறப்புக்கள் 275,815 ஆகவும் இருந்துள்ளன. சிலர் வேறுநாடுகளுக்கு செல்வதும், சிலர் மீண்டும் தென்கொரியா வருவதும் கணிப்பில் உள்ளடங்கும்.
கடந்த ஆண்டில் அங்கு பிறப்பு 10.65% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேவேளை மரணம் 3.1% ஆல் அதிகரித்து உள்ளது. தென்கொரியாவின் தற்போதைய சனத்தொகை 51.83 மில்லியன் ஆக உள்ளது. அங்கு சனத்தொகை குறைவது 1953ம் ஆண்டுக்கு பின் இதுவே முதல் தடவை.
வேலைவாய்ப்பு இன்மை, அதிகரித்துவரும் குடியிருப்பு செலவுகள் என்பனவே பிறப்பு குறைவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அங்கு தாய் ஒருவருக்கான பிறப்பு விகிதம் (பெறும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) 0.84 ஆக மட்டுமே உள்ளது. 1950ம் ஆண்டுகளில் அங்கு பிறப்பு விகிதம் 5.6 ஆக இருந்தது.
பிறப்புக்களை அதிகரிக்கும் முயற்சியில் கடந்த 14 ஆண்டுகளாக தென்கொரிய அரசு $171 பில்லியன் பணத்தை செலவழித்து இருந்தது. ஆனாலும் தேவையான பிறப்புகளை அடைய முடியவில்லை.
அந்நாட்டு பெரு நகரங்களில் குழந்தைகளை பராமரிக்க அமர்த்தப்படும் பணியாளருக்கு (babysitter) மாதம் ஒன்றில் சுமார் $1,850 செலவாகும். தனியார் பாலர் பாடசாலைக்கு (kindergarten) மாதம் ஒன்றில் சுமார் 1,390 செலவாகும்.