உலகின் மிக பெரு நிறுவனங்கள் மூன்று தம்மை சிறு நிறுவனங்களாக துண்டாட உள்ளதாக கூறியுள்ளன. ஜப்பானின் Toshiba, அமெரிக்காவின் General Electric (GE) மற்றும் Johnson & Johnson ஆகிய நிறுவனங்களே தம்மை சிறு நிறுவனங்களாக பிரிக்கவுள்ளன.
ஜப்பானின் Toshiba நிறுவனம் 3 சிறிய நிறுவனங்களாக பிரிக்கப்படும். எரிபொருள் மற்றும் கட்டுமான வர்த்தக பிரிவு ஒரு தனி நிறுவனமாகவும், semiconductors பிரிவு இன்னோர் தனி நிறுவனமாகவும், devices மற்றும் storage பிரிவு மூன்றாவது தனி நிறுவனமாகவும் பிரிக்கப்படும். இப்பணிகள் 2023ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானியாவின் CVC Capital Partners என்ற முதலீட்டு நிறுவனம் Toshiba வை $20 பில்லியனுக்கு கொள்வனவு செய்ய முனைத்திருந்தது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. Toshiba 1870ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் 2019ம் ஆண்டுக்கான வருமானம் $32.44 பில்லியன்.
GE தனது துண்டாடல் செய்தியை செவ்வாய்க்கிழமை அறிவித்து இருந்தது. இதுவும் 3 சிறு நிறுவனங்களாக பிரிக்கப்படும். இதன் எரிபொருள் வள பிரிவு (energy) ஒரு தனி நிறுவனமாகவும், வைத்தியத்துறை பிரிவு (healthcare) இன்னோர் நிறுவனமாகவும், இலத்திரனியல் பிரிவு மூன்றாம் நிறுவனமாகவும் பிரிக்கப்படும். 1892ம் ஆண்டு ஆரம்பிக்கப்படட இந்த நிறுவனத்தின் 2020ம் ஆண்டுக்கான வருமானம் $75.62 பில்லியன்.
அமெரிக்காவின் Johnson & Johnson நிறுவனம் இரண்டு சிறு நிறுவனங்களாக பிரிக்கப்பட உள்ளன. இதன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு பிரிவுகள் ஒரு நிறுவனமாகவும், ஏனைய தயாரிப்புகள் இன்னோர் நிறுவனமாகவும் பிரிக்கப்படும். 1886ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் 2020ம் ஆண்டுக்கான உலக வருமானம் $82.58 பில்லியன்.