திருத்தி அமைக்கப்பட்ட கோவில் சந்தை 

திருத்தி அமைக்கப்பட்ட கோவில் சந்தை 

வடமராட்சியின் கரவெட்டி பகுதியில், நெல்லியடி-கொடிகாமம் வீதியோரம் உள்ள பழையதோர் சந்தை ‘கோவில் சந்தை’. இது அண்மையில் பெரும் செலவில் திருத்தி அமைக்கப்பட்டு மார்ச் 20, 2025 அன்று மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

திருத்தி அமைத்தலுக்கு 31 மில்லியன் ரூபாய் செலவானதாகவும் அதில் 27 மில்லியன் புலம்பெயர்ந்த தமிழரின் பணம் என்றும், மிகுதி 4 மில்லியன் பிரதேச சபை வழங்கிய பணம் என்றும் கூறப்படுகிறது.

யுத்தத்துக்கு முன் இப்பகுதியில் கோவில் சந்தை ஒரு பிரதான சந்தை. யுத்தத்துக்கு முன் இப்பகுதி மக்களால் நிரம்பி வழிந்த காலத்திலும் கோவில் சந்தை ஒரு “தனது காரரின் இரவு சந்தை” மட்டுமே. இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடும் தோட்டக்காரர் தமது தோட்டங்களில் பறித்த காய்கறிகளை மாலை சுமார் 6:00 முதல் 8:00 வரை இந்த சந்தையில் விற்பனை செய்வர். சிலர் தம் வீடுகளில் சமைத்த உணவுகளையும் விற்பனை செய்வர். தேங்காய், மீன் போன்ற பொருட்கள் மட்டுமே வேறு இடங்களில் கொள்வனவு செய்யப்பட்டு இங்கே மீள் விற்பனை செய்யப்படும்.

தற்போது சொந்த காய்கறிகளை விற்பனை செய்ய தனதுகாரர் பெரிதும் இங்கில்லை. இரவு சந்தைக்கும் அறவே வாய்ப்பில்லை. அப்படியானால் கோவில் சந்தை இன்னோர் மீள் விற்பனை செய்வோரின் பகல் சந்தை ஆகுமா? அதற்குரிய மக்கள் தொகை இங்குள்ளதா? அத்துடன் தற்போது இங்கே வீதிக்கு வீதி தனியார் கடைகள் மலிந்து உள்ளன. அவற்றுடன் கோவில் சந்தை போட்டியிட முடியுமா?

இப்பகுதியில் உள்ள ஞானாசாரியார் கல்லூரியில் யுத்தத்துக்கு முன் கல்வி கற்ற மாணவர் தொகை ஆயிரத்துக்கும் அதிகம். ஆனால் தற்போது இங்கே பதிவு செய்த மாணவர் தொகை சுமார் 60 அல்லது 70 மட்டுமே. நாளாந்த வரவு அதிலும் குறைவு. ஆனால் தற்போது ஞானசாரியாரில் உள்ள கட்டிடங்களின் அளவு யுத்தத்துக்கு முன் இருந்த அளவின் இரு மடங்கிலும் ஆதிகம். மறுபுறம் மாணவர் தொகை இங்கே தொடர்ந்தும் வீழ்ச்சி அடைகிறது. அரசு இந்த பாடசாலையை மூடினால் அரசை குறை கூறுவதில் அதிர்த்தமில்லை.

நெல்லியடியில் இருந்து திக்கம் கடற்கரை செல்லும் வீதியில் உள்ளது ‘மானாண்டி’ என்ற இன்னோர் பிரதான சந்தை. யுத்தத்துக்கு முன் இந்த சந்தை பெரும்திரளான விற்பனையாளரையும், கொள்வனவாளரையும் கொண்டிருக்கும். இந்த சந்தையும் 2015ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது என்கிறது அங்குள்ள அடையாள கல். ஆனால் கடந்த சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் இந்த சந்தையில் தனது கடையின் முன் பகுதியை கூட்டி பெருகும் ஒரு கடைக்காரரை தவிர வேறு ஒருவரும் இல்லை.

படம் 1: மானாண்டி சந்தை.

அருகில் உள்ள மாலிசந்தை முதல் கடற்கரை வரையான வீதியில் பெரும் செலவில் அமைக்கப்பட்ட இரண்டு சிறுவர் விளையாட்டு இடங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் உள்ளன. இரண்டும் தற்போது கைவிடப்பட்டு உள்ளன. அதில் ஒன்றில் சிறுவருக்கான நீர் தொட்டியும் உள்ளது. நீர் தொட்டியின் நிலையும் கேவலம்.

படம் 2: நீர் தொட்டியுடன் சிறுவர் பூங்கா

மற்றையது பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் ‘மழலைகள் பூங்கா’ . கடந்த சனிக்கிழமை இது ஒரு பற்றைக்காடு. இதன் வலது பக்க தூணில் 1964 என்றும் இடது பக்க தூணில் 2019 என்றும் உள்ளன. இந்த பூங்கா 2019 இல் திருத்தி அமைக்கப்பட்டதா அல்லது மரணித்ததா என்று தெரியவில்லை.

படம் 3: பாரதிதாசன் மழலைகள் பூங்கா

சுமார் 31 மில்லியன் செலவில் திருத்தி அமைக்கப்பட்ட கோவில் சந்தையின் எதிர்காலம் என்னவாகும்? காலமே பதில் சொல்லும்.

மேற்குறிப்பிடப்பட்ட வெகுமதி நிலையங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதற்கு ஒரே காரணம் இங்கே சுமார் இரண்டு சந்ததிகளுக்கு வழமைபோல் குழந்தைகள் பிறவாமை. கிழமைக்கு ஒரு தடவை, மாதத்துக்கு பல தடவை இங்கே அவர் காலமானார், இவர் காலமானார் என்று அறியும் நீங்கள் எப்போது ஊரில் ஒரு குழந்தை பிறந்தது என்று கடைசியாக அறிந்தீர்கள்? யுத்த காலத்தில் இங்கிருந்த இள வயதினர் இடம்பெயர அதற்கு அடுத்த சந்ததிகள் வெளிநாடுகளிலேயே பிறக்கின்றன.

மிகுதியாய் உள்ள இள வயதினரும் வெளிநாடு செல்ல ஆவலாய் உள்ளதால் இங்கே தமிழ் சனத்தொகை வளர்ச்சி மிக மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு பிறக்காத குழந்தை 6 ஆண்டுகளில் பாடசாலை செல்ல முடியாது, சுமார் 25 ஆண்டுகளில் குழந்தை பெற முடியாது. வெளிநாடு சென்றவர்களும் நிதி தருவார், பிள்ளைகளை தரார்.

அண்மையில் இங்கே உள்ள அத்துளு அம்மன் கோவில் திருவெண்பா ஒன்றுக்கு சென்றோர் தொகை 12 மட்டுமே. அந்த 12 பேரும் 60 வயதை தாண்டியவர்கள். சில கோவில்களுக்கு அதுவும் இல்லை.

பிள்ளைகள் இருந்தபோது வசதிகள் இல்லை, வசதிகள் உள்ளபோது பிள்ளைகள் இல்லை.

கோவில் சந்தையில் புதிதாக ஒரு மலசலகூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை நெல்லியடி சந்தி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட மலசலகூடம் பல ஆண்டுகளாக திருத்த வேலைகளுக்காக “தற்காலிகமாக” மூடப்பட்டுள்ளதாம். 

படம் 4: நெல்லியடி சந்தி மலசலகூடம்