அமெரிக்க சனாதிபதி பைடெனும், சீன சனாதிபதி சீ ஜின் பிங்கும் அமெரிக்க நேரப்படி திங்கள் (சீன நேரப்படி செவ்வாய் காலை) இணையம் மூலம் (virtual meeting) உரையாட உள்ளனர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இரு தரப்புமிடையே தற்போது நிலவி வரும் முறுகல் நிலையை இந்த உரையாடல் தணிக்க முனையலாம் என்று கருதப்படுகிறது.
பைடென் ஆட்சிக்கு வந்தபின் மேற்கொள்ளும் ஆழமான உரையாடலாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கரோனா, தாய்வான், ஹாங் காங், வர்த்தகம் போன்ற பல விசயங்கள் இரவு தரப்புமிடையே முறுகல் நிலை உருவாக காரணங்களாக என்றாலும், சீனாவின் இராணுவ வளர்ச்சி, சீனா தென் சீன கடலில் அமைக்கும் புதிய தீவுகள், சீனா தயாரிக்கும் hypersonic ஏவுகணைகள் ஆகியனவே கூறப்படாத பிரதான காரணங்கள்.
தாய்வான் படைகளுக்கு அமெரிக்க படைகள் இரகசியமாக பயிற்சி வழங்குவதும் தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது. தாய்வான் ஐ.நாவில் ஒரு நாடு அல்ல என்ற நிலையில் சீனா இதை எதிர்க்கிறது.
முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த முறுகல் நிலை பைடென் ஆட்சியிலும் தொடர்கிறது. ரம்ப் நடைமுறை செய்த சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரிகள் தற்போது நடைமுறையில் உள்ளது. சீனா மீது பைடெனும் ரம்பின் கொள்கைகளையே தற்போது கொண்டுள்ளார்.
சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியால் விசனம் கொண்ட சில அமெரிக்க அரசியல்வாதிகள் அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் (Beijing 2022 Winter Olympic) போட்டிகளை அமெரிக்கா தவிர்க்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.