வரும் திங்கள்கிழமை வியாழனும் (Jupiter), சனியும் (Saturn) பூமியில் இருந்து பார்ப்பவருக்கு ஒரே நேர்கோட்டில் வரவுள்ளன. அதனால் வியாழனும், சனியும் ஏறக்குறைய ஒன்றாக தெரியும். சுமார் 800 ஆண்டுகளின் பின் இதை நாம் காணக்கூடியதாக இருக்கும்.
உண்மையில் இவ்வாறு வியாழனும், சனியும் 1623ம் ஆண்டும் ஏறக்குறைய ஒரே நேர்கோட்டில் வந்திருந்தன. ஆனால் அது சூரியன் பக்கமாக நிகழ்ந்ததால், சூரிய பிரகாசம் அதை கண்களால் காண்பதை முடியாமல் செய்திருந்தது. அதற்கு முன் 1226ம் ஆண்டு இரவு வேளையில் இரண்டும் ஒரு கோட்டுக்கு வந்திருந்தன. அது Genghis Khan ஆண்ட காலம்.
திங்கள்கிழமை (2020/12/21) சூரியன் மறைந்த பின் தென்மேற்கு அடிவானத்தை நோக்கினால் வியாழனும், சனியும் தெரியும். அவற்றுக்கு இடையே சுமார் 0.1 பாகை (1/10 பாகை) இடைவெளியே இருக்கும். அதற்கு முனைய தினங்களில் அவை அருகருகே வருவதை ஒப்பிடக்கூடியதாக இருக்கும். அவற்றுள் ஒளிமயம் அதிகமானதே வியாழன்.
அவை அருகருகே தெரிந்தாலும் அவற்றுக்கு இடையே 730 மில்லியன் km தூர இடைவெளி இருக்கும். பூமிக்கும் வியாழனுக்கு இடையேயான இடைவெளி 890 மில்லியன் km.
வியாழன் ஒரு தடவை சூரியனை சுற்ற (வியாழன் ஆண்டு) பூமியின் 11.862 ஆண்டுகள் ஆகும். சனி ஒரு தடவை சூரியனை சுற்ற (சனி ஆண்டு) பூமியின் 29.4571 ஆண்டுகள் ஆகும்.
அடுத்து இவ்வாறு வியாழனும், சனியும் ஒரே கோட்டில் 2080ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி வரும்.