நேற்று வெள்ளிக்கிழமை இரவு 38 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்ததாக தாய்வான் கூறியுள்ளது. மொத்தம் 38 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைவது இதுவே முதல் தடவை.
மேற்படி 38 விமானங்களில் சீனாவின் புதிய J-16 வகை யுத்த விமானங்கள் பதினெட்டும், H-6 வகை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் அடங்கும்.
அதற்கு சற்று முன் வெள்ளிக்கிழமை பகலும் 25 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்து இருந்தன. இன்று சனிக்கிழமையும் மேலும் 20 யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்து உள்ளன.
2020ம் ஆண்டு சீனா மொத்தம் 380 தடவைகள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்து உள்ளது என்று தாய்வான் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே 500 தடவைக்கு மேல் சீன விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழைந்து உள்ளன.
சீனாவின் யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்புள் நுழையும் எண்ணிக்கையும், நுழையும் விமானங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இச்செயல் பின்வரும் இரண்டில் ஒரு விளைவை உருவாக்கலாம்.
முதலாவது, தாய்வான் எச்சரிக்கைகளை மட்டும் தெரிவித்து பின் மௌனம் ஆகலாம். ஆனால் அது தாய்வான் வான்பரப்பு என்று ஒன்று இல்லை, தாய்வான் சீனாவின் அங்கம் ஆனபடியால் அதுவும் சீன வான்பரப்பே என்ற கருத்தை உறுதிப்படுத்தும். தாய்வானுக்கு அதை விரும்பாது.
இரண்டாவது, தாய்வான் நுழையும் சீன விமானங்களை தாக்கினால், தாய்வான் யுத்தத்தை ஆரம்பித்தது என்று கூறி இராணுவ பலம் மூலம் தாய்வானை சீனா தன்னுள் எடுக்கலாம். அதையும் தாய்வான் விரும்பாது.
அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய மேற்கு நாடுகள் தமது யுத்த கப்பல்களை சீனாவை சீண்டும் நோக்கில் அப்பகுதி ஊடு செலுத்துவதையும் சீனா தனக்கு சாதகமாக்குகிறது.