தாய்லாந்து 6 பேர் மரணம் கொலை, தற்கொலை?

தாய்லாந்து 6 பேர் மரணம் கொலை, தற்கொலை?

தாய்லாந்து உல்லாச பயணிகள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 6 பேர் பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கொலை, தற்கொலை காரணமாக பலியாகி இருக்கலாம் என்று தாய்லாந்து போலீசார் கருதுகின்றனர்.

இவர்கள் வியட்நாமியர் என்றும், இவர்கள் தேநீர் அருந்திய பாத்திரங்களில் சயனைட் (cyanide) நஞ்சு இருந்தமையும் அறியப்பட்டுள்ளது.

Hong Pham Thanh (வயது 49), அவரின் மனைவி Thi Nguyen Phuong (வயது 46), Thi Nguyen Phuong Lan (வயது 47), Dinh Tran Phu (வயது 37) ஆகிய நால்வரும் வியட்நாமில் இருந்து வந்துள்ளனர். Shrine Chong (வயது 56), Dang Hung Van (வயது 55) ஆகிய இருவரும் அமெரிக்கர்.

கடந்த சனி, ஞாயிறு தினங்களில் விடுதிக்கு வந்த இந்த 6 பேரும் 5 அறைகளில் தங்கியிருந்துள்ளனர். திங்கள் இவர்கள் ஒரு அறையில் கூடி, உணவுகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளனர்.

உணவுகள் அறைக்கு பிற்பகல் 2:00 மணிக்கு வந்தபோது Chong மட்டும் அறையில் இருந்துள்ளார். அவரே உணவை பெற்றுள்ளார். பணியாள் தேநீர் தயாரிப்புக்கு உதவ முன்வர, Chong உதவியை மறுத்து, தானே தயாரிப்பதாக கூறி பணியாளரை திருப்பி அனுப்பியுள்ளார்.

இவர்கள் மரணமாகி சுமார் 24 மணித்தியாலங்களின் பின்னரே உடல்களை விடுதி கண்டுள்ளது.

Hong Pham Thanh, அவரின் மனைவி Thi Nguyen Phuong வீதி அமைக்கும் வர்த்தகம் ஒன்றை செய்வதாகவும், Chong ஜப்பானில் செய்யும் கட்டுமான திட்டம் ஒன்றில் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்படி 6 பேரில் ஒருவர் பெரும் கடனில் மூழ்கி இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.