தலைமறைவாகி இருந்த தாய்லாந்தின் போலீஸ் அதிபர் Thitisan Utthanaphon, வயது 39, தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். Jo Ferrari என்றும் அழைக்கப்படும் இவர் போதை விற்பனையாளர் என்று சந்தேகிக்கப்படும் கைதி ஒருவரை கொடுமைப்படுத்தி கொலை செய்தது CCTV வீடியோ மூலம் பதிவாகி பகிரங்கத்துக்கு வந்ததே இவர் ஓடி ஒளிந்தமைக்கு காரணம்.
Jeerapong Thanapat என்ற 24 வயது கைதியிடம் $60,000 பணம் தருமாறும், அவ்வாறு தந்தால் வழக்கை கைவிடுவதாகவும் Thitisan கூறி உள்ளார். கைதி இணங்க மறுத்தபோது பிளாஸ்டிக் பை ஒன்றை பயன்படுத்து கைதியின் மூச்சை அடக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் CCTV வீடியோவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவை அடையாளம் காணப்படாத ஒருவர் பகிரங்கம் செய்துள்ளார். உடனே Thitisan மறைய முற்பட்டு உள்ளார். ஆனால் போலீசார் தேடுதலின் பின் அவரை கைது செய்துள்ளனர்.
மேற்படி போலீஸ் அதிகாரியின் Bang Chan பகுதி ஆடம்பர வீட்டை முற்றுகை இட்ட போலீசார் 13 விலை உயர்ந்த ஆடம்பர கார்களை கைப்பற்றி உள்ளனர். இவரின் வீட்டில் இரண்டு பர்மா பெண்களும், ஒரு காவலாளியும் பணிபுரிந்து உள்ளனர். Bangkok பகுதியில் கடமையாற்றிய இவர் Bang Chang பகுதியில் உள்ள இந்த வீட்டுக்கு சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டுமே வருவதாக பணியாளர் கூறி உள்ளனர்.
இவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் மேற்படி கொலை தொடர்பாக மேலும் 6 பேர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.